Skip to main content

“நான் இங்கு நிற்பதற்கு கமல்தான் காரணம்”- இயக்குனர் மகேந்திரனின் நினைவுகள்

Published on 02/04/2019 | Edited on 02/04/2019

ரஜினியை வைத்து  மிகப்பெரிய வெற்றி படங்களை இயக்கியவர். ரஜினியின் சில ஸ்டைல்கள் இவரிடம் இருந்துதான் வந்தது என்று  இயக்குனர் மஹேந்திரனை பற்றி சொல்வார்கள். இவருடைய பேச்சை எடுத்தாலே அதில் ரஜினிகாந்தின் பெயர்தான் அதிகமாக அடிபடும். ஆனால், ரஜினிக்கு போட்டியாக, தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாதவராக இருந்த கமலையும் இயக்குனர் மஹேந்திரனையும் இணைத்து அவ்வளவாக யாரும் பேசவே மாட்டார்கள். ஏனென்றால் மஹேந்திரன் இயக்கத்தில் கமல் நடித்ததில்லை. அதனால் பலருக்கு அவர்கள் இருவருடைய நட்பு தெரிந்திருக்க வாய்ப்பிருக்காது. கமலுக்கும் மஹேந்திரனுக்குமான நட்பு குறித்து மஹேந்திரனே ஒரு மேடையில் பேசியதை மஹேந்திரனின் மறைவையொட்டி நினைவுக்கொள்வோம். 
 

mahendran mahendran

 

 

“அவரால் சினிமாவுக்குள் வந்தார், இவரால் சினிமாவுக்குள் வந்தார் என சொன்னார்கள். ஆனால், நான் இங்கு நிற்பதற்கு காரணமே மகாகலைஞன் கமல் அவர்கள்தான். இது யாருக்கும் தெரியாது. இன்று இது அனைவருக்கும் தெரிந்தாகவேண்டும் என்றுதான் சொல்கிறேன். சினிமாவுக்குள் நான் வருவதற்கு பல காரணங்கள் இருக்கலாம். நான் மற்றவர்களை போல சினிமாவுக்குள் விரும்பி வந்தவன் அல்ல, வலுக்கட்டாயமாக இழுத்துவரப்பட்டவன். சினிமாவைவிட்டு பலமுறை ஓடி இருக்கிறேன். அப்படிப்பட்ட என்னைதான் முள்ளும் மலரும் என்கிற என்னுடைய முதல் படத்தை இயக்க வைத்தார்கள்.
 

கமல் சாரை பற்றி சொல்லவில்லை என்றால் நான் பாவி ஆகிவிடுவேன். நான் முதல் படம் எடுப்பதற்கு முன்பு கமல் நடித்த படங்களுக்கு கதை வசனங்கள் எழுதியிருக்கிறேன். அவர் ஒரு மகா கலைஞன். அக்காலக் கட்டத்தில் நாங்கள் இருவரும் பேசிக்கொள்ளும்போது நல்ல சினிமாக்கள் பற்றின பரிமாற்றங்கள் ஏற்படும். அவர் பேசுவதெல்லாம் எனக்குள் போய்கொண்டே இருக்கும். எனக்கு தொடக்கத்திலிருந்தே தமிழ் சினிமாக்களில் வெறுப்பு இருந்தது. கடைசியில் நான் சினிமா துறையிலேயே நிரந்தரமாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. முள்ளும் மலரும் என்று என்னுடைய முதல் படத்தை எனக்கு பிடித்ததை போல எடுக்க வேண்டும் என நினைத்தேன். ஆனால், எனக்கு ஒரு நல்ல ஒளிப்பதிவாளர் கிடைக்கவே இல்லை. அப்போது எனக்கு பாலு மஹேந்திராவை அறிமுகம் செய்து வைத்தவர் கமல்ஹாசன்தான். இன்றுவரைக்கும் முள்ளும் மலரும் படத்தை பற்றியும், என்னை பற்றியும் பேசுகிறீர்கள். அதற்கு நான் ஒன்றுமே செய்யவில்லை. அதற்கு முழுகாரணம் மகாகலைஞன் கமல்தான்.
 

அந்த படம் எல்லாம் முழுதாக முடித்துவிட்டேன். படத்தின் முக்கிய ஆத்மாவாக இருந்த சீனை மட்டும் கடைசியாக எடுத்துக்கொள்ளலாம் என நினைத்திருந்தேன். அதற்குள் தயாரிப்பாளருக்கும் எனக்கும் சின்ன மனஸ்தாபம் ஏற்பட்டது. அதேபோல பாலு மஹேந்திராவுக்கும் அவருக்கும் விரோதமே இருந்தது. அதனால் அந்த காட்சியை எடுக்க பணம் தரமுடியாது என்று சொல்லிவிட்டார். ‘செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றால்’ பாட்டிற்கு ஒரு ஆரம்பமாக இருந்த ஒரு சீன், அதை விட்டுவிட்டால் கண்டிப்பாக இந்த படமே மறக்கப்பட்டிருக்கும். நான் காணாமல் போயிருப்பேன். அந்த சமயத்தில்தான் கமலை சந்தித்து பேசிக்கொண்டிருந்தேன், அப்போது நான் உதவி என்றுகூட கேட்கவில்லை, ஆனால் அந்த காட்சியை எடுக்க கமல் அவராகவே முன்வந்து உதவி செய்தார். என் மேல் உள்ள நம்பிக்கையில் தயாரிப்பாளரிடம் சென்று எவ்வளவோ எனக்காக வாதாடினார். தயாரிப்பாளர் முடியவே முடியாது என்று மறுத்தார். கடைசியாக அந்த காட்சியை எடுக்க நான் பணம் தந்தால் எடுப்பீர்களா என்று கேட்டார் கமல். உடனடியாக கமல் அடுத்த நாளே அந்த காட்சியை எடுக்க பணம் கொடுத்து உதவினார். அவர் மட்டும் அன்றைக்கு உதவி செய்யவில்லை என்றால் நான் இன்று இல்லை. என்னுடைய படங்களும் இல்லை. என் வாழ்நாள் முடிகின்ற வரைக்கும் அந்த மாமனிதரை மறக்கவே மாட்டேன்” என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்