ராஷ்மிகா மந்தனா தற்போது தனுஷ் நடிப்பில் உருவாகும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்தியில், விக்கி கௌஷல் நடிப்பில் உருவாகும் ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார். தெலுங்கில் புஷ்பா 2, ரெயின்போ, தி கேர்ள்ஃபிரண்ட் உள்ளிட்ட படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் ராஷ்மிகா சமீபத்தில் மும்பைக்கு சென்றிருந்தார். அது குறித்து தற்போது பேசிய ராஷ்மிகா, நாட்டிலேயே மிக நீளமான கடல்வழி பாலமாக அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலத்தைக் குறிப்பிட்டு பிரதமர் மோடியின் ஆட்சியைப் புகழ்ந்து பேசியுள்ளார். ஒரு நேர்காணலில் பேசிய அவர், “அடல் சேது பாலத்தால் 2 மணி நேர பயணம் 20 நிமிடமாக மாறியுள்ளது. இது சாத்தியம் என யாராவது நினைத்துப் பார்த்திருப்போமா. நவி மும்பையில் இருந்து மும்பை நகரம், கோவாவிலிருந்து மும்பை, பெங்களூருவிலிருந்து மும்பை என அனைத்து வழி பயணங்களும் மிக எளிதாக மாறியுள்ளது. அதன் உள்கட்டமைப்பும் அற்புதமாக உள்ளது. இது எனக்கு பெருமையாக இருக்கிறது.
இந்தியா ஒரு போதும் துவண்டுவிடுவதில்லை. நாட்டின் வளர்ச்சியைப் பாருங்கள். கடந்த 10 ஆண்டுகளில் நாடு எப்படி வளர்ந்திருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. உள்கட்டமைப்பு, நம்மிடம் இருக்கும் திட்டம், சாலைத் திட்டமிடல், எல்லாம் மிகவும் புத்திசாலித்தனமானது. இந்தியா ஸ்மார்ட்டான நாடு. இளம் தலைமுறையை கொண்ட இந்த நாடு மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இளைஞர்கள் இப்போது மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்கள். இளம் பாரதியர்கள் வாக்களிக்க வேண்டும். இப்போது அவர்களுக்கு அந்தப் பொறுப்பு உண்டு. நாடு சரியான பாதையை நோக்கி செல்கிறது” என்றார்.