Skip to main content

‘இந்தியன் 2’ படத்திலிருந்து விலகும் காஜல் அகர்வால்?

Published on 11/11/2021 | Edited on 11/11/2021

 

kajal aggarwal leaves from indian 2

 

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்துவந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில், படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையேயான கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சனைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. 

 

இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை இயக்க உள்ளதாக ஷங்கர் அறிவித்தார். இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பிவந்தனர். அதன் பின் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இயக்குநர் ஷங்கருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமுக முடிவு எட்டப்பட்டுள்ளதால், விரைவில் ‘இந்தியன் 2’ படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என தகவல் வெளியாகியது. 

 

இந்நிலையில், ‘இந்தியன் 2’ படப்பிடிப்பை தொடங்குவதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது. கெளதம் கிச்சலு என்பவரை கடந்த ஆண்டு திருமணம் செய்துகொண்ட காஜல் அகர்வால் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். அதனால் காஜல் அகர்வால் படப்பிடிப்பில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து காஜல் அகர்வால் நடிப்பதாக ஒப்புக்கொண்ட படங்களில் அவருக்குப் பதிலாக மற்ற நடிகைகள் தேர்வு செய்யப்பட்டுவருகிறார்கள். அந்த வகையில், ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வாலுக்கு பதிலாக வேறொரு நடிகை நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நடிகை யார் என்ற தகவல் இதுவரை வெளியாகவில்லை. காஜல் அகர்வால் நடித்த காட்சிகள் அனைத்தும் மீண்டும் படமாக்கப்பட உள்ளதாக  கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்