கடந்த 2017ஆம் ஆண்டு ஜாக் ஸ்னைடர் இயக்கத்தில் வெளியான டிசி படம் 'ஜஸ்டீஸ் லீக்'. இந்தப் படத்தில் டிசியின் முக்கிய சூப்பர் ஹீரோக்களான சூப்பர் மேன், பேட்மேன், வொண்டர் வுமன், அக்குவாமேன், ப்ளாஷ், உள்ளிட்ட அனைவரும் இணைந்து நடித்திருப்பார்கள். இந்தப் படம் தியேட்டர் ரிலீஸுக்காக கட் செய்தபோது சுமார் 2 மணி நேரத்திற்கு மட்டுமே கட் செய்து வெளியிட்டனர்.
ஹாலிவுட் சினிமாவில் படத்தின் எடிட்டிங்கில் தயாரிப்பாளரின் பேச்சுக்குதான் அதிக உரிமை உண்டு, அதனைத் தொடர்ந்துதான் இயக்குனரின் பேச்சுக்கு படத்தொகுப்பில் உரிமை உண்டு. அதனால் தியேட்டரில் வெளியாகும் கட்டிற்கு முன்பாக டைரக்டர் ஒரு கட் செய்து வைத்திருப்பார். அதைத்தான் தயாரிப்புக்குழு தியேட்டர் ஆடியன்ஸிற்கு ஏற்றார்போல கட் செய்வார்கள்.
தியேட்டரில் படம் வெளியானபின்பு, சில தயாரிப்பு நிறுவனம் டைரக்டர்ஸ் கட் வெர்ஸனை சி.டி.யாக ரிலீஸ் செய்வது வழக்கமாகவே உள்ளது. அந்த வகையில் ஜாக் ஸ்னைடர் எடுத்த ஜஸ்டீஸ் லீக் படத்தின் இயக்குனர் கட் வெளியிட வேண்டும், அது தியேட்டர் வெர்ஸனைவிட அருமையாகவும் டிசி ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகவும் இருக்கும் என்று கடந்த ஒரு வருடமாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில் டிசி தயாரிப்பு நிறுவனம் தற்போது வேறு ஒரு நிறுவனத்தின் கீழ் கைமாறியுள்ளது. அவர்கள் ஹெச்.பி.ஓ மேக்ஸ் என்ற புது ஓ.டி.டி. பிளாட்ஃபார்மை அறிமுகம் செய்கின்றனர். அதில், ஹெச்.பி.ஓ. டி.வி. தொடர்கள் மற்றும் வார்னர் பிரதர்ஸ் தயாரிப்புப் படங்கள், அதில் டிசி படங்களும் அடங்கும். இந்த ஓ.டி.டி.யின் புரொமோஷனுக்காக அடுத்த வருடம் ஜாக் ஸ்னைடர்ஸ் வெர்ஸன் ஜஸ்டீஸ் லீக் ரிலீஸ் செய்யப்படும் என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நான்கு மணிநேரப் படமாக வெளியிடப்படும் அல்லது ஐந்து பாகங்கள் கொண்ட மினி சீரிஸாக வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.