
இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதா சாகேப் பால்கேவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகுவதாக கடந்த 2023ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இப்படத்தை எஸ்.எஸ்.ராஜமௌலி வழங்க நிதின் கக்கர் இயக்குவதாகவும் வருண் குப்தா மற்றும் ராஜமௌலியின் மகன் எஸ்.எஸ்.கார்த்திகேயா தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. மேலும் ‘மேட் இன் இந்தியா’(MADE IN INDIA) என்ற தலைப்பில் தமிழ், தெலுங்கு உட்பட மொத்தம் ஆறு மொழிகளில் இப்படம் வெளியாகும் எனவும் ஒரு அறிவிப்பு வீடியோ வெளியாகியிருந்தது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தது.
இந்த நிலையில் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆர். தாதாசாகேப் பால்கே கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் முழுக் கதை இப்போது நிறைவுபெற்றதாகவும் அதனை படக்குழுவினர் ஜூனியர் என்.டி.ஆரிடம் சொல்லி ஓ.கே. வாங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை. விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூனியர் என்.டி.ஆர். தற்போது இன்னும் பெயரிடாத படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் 25ஆம் தேதி வெளியாகிறது. இதற்கு முன்பாக இந்தியில் ஹிருத்திக் ரோஷனுடன் அவர் நடித்த வார் 2 படம் இந்தாண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி வெளியாகிறது. இப்படங்களை தவிர்த்து அவரது லைனப்பில் ‘மேட் இன் இந்தியா’ படம் இணையும் என தெலுங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.