சக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபு தேவா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜாலியோ ஜிம்கானா. டிரான்ஸ் இந்தியா மீடியா தயாரித்துள்ள இப்படத்திற்கு அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைத்துள்ளார். இப்படத்தில் மடோனா செபாஸ்டியன், யாஷிகா ஆனந்த், கிங்ஸ்லி, ரோபோ சங்கர், அபிராமி, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா...’ என்ற முதல் பாடல் ஆகியவை வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றுள்ளது.
இப்படம் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்திற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் படத்தின் இயக்குநர் சக்தி சிதம்பரம், இசையமைப்பாளர் அஸ்வின் விநாயகமூர்த்தி, நடிகர் ரோபோ சங்கர், நடிகை மடோனா செபாஸ்டியன் ஆகியோரை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகச் சந்தித்தோம். அப்போது அவர்கள் படம் தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு சுவாரஸ்ய பதிலளித்தனர்.
படக்குழுவினரிடம் ‘போலீஸ்காரன கட்டிக்கிட்டா...’ பாடலில் நிறைய வரிகள் இரட்டை அர்த்தமுள்ளதாக இருப்பதாக கமெண்ட்ஸ்கள் வருகிறது என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, பாடலை எழுதிய சக்தி சிதம்பரம் அதற்கு, “என்ன டபுள் மீனிங்... டாக்டர் ஊசி குத்துவது டபுள் மீனிங்கா? திருமணம் செய்துகொள்ளப் போகிற ஒரு பெண்ணிடம் எந்த மாதிரியான மாப்பிள்ளை வேண்டும் என்று கேட்கும்போது வேலையில்லாத கணவரிடம் எதாவது பொருள் வாங்கச் சொல்லி வேலை சொல்லி கட்டளையிடுகிறார். இந்த அர்த்தத்தில்தான் அந்த பாடல் உள்ளது. என் பையன் வேலை இல்லாமல் இருந்தால் அவனை வேலை தேடிப் பார்க்கச் சொல்வேன். அந்த வேலையை உங்களின் பார்வையில் என்னவென்று நினைக்கிறீர்கள்? உங்களின் பார்வையில்தான் அது தவறாகத் தெரிகிறது. அந்த மாதிரியான எண்ணத்தில் பாடல் எழுதவில்லை. தவறாக பார்ப்பவர்களின் கண்ணை மாற்றச் சொல்லுங்கள் என் பென்னை மாற்றச் சொல்லாதீர்கள்” என்று பதிலளித்தார்.
அதே கேள்விக்கு அஸ்வின் விநாயகமூர்த்தி பதிலளிக்கையில், “இந்த படத்தில் ‘போலீஸ் காரன கட்டிக்கிட்டா...’ இடம்பெற்றுள்ள காட்சியைப் பார்த்தால் பாடலில் சிங்கிள் மீனிங் தான் இருக்கும். இந்த பாடலை உருவாக்க காரணம் இப்பாடல் திருமணம் போன்ற நிகழ்ச்சியில் ஜாலியாக போட்டு வைப் செய்வதற்காகத்தான்” என்றார். அதன் பின்பு ரோபோ சங்கர் பேசுகையில், “படத்திற்கு தணிக்கை குழு யூ சான்றிதழைக் கொடுத்திருக்கும்போது அதை சர்ச்சையாக மாற்றக்கூடாது” என்று கூறினார். அதைத் தொடர்ந்து மடோனா செபாஸ்ட்டியன் ‘போலீஸ் காரன கட்டிக்கிட்டா...’ பாடலை பாடுகையில் படக்குழுவினர் அவருடன் உற்சாகமாகப் பாடலை பாடினார். ஜாலியோ ஜிம்கானா படத்தின் இரண்டாவது பாடலான ‘ஊசி ரோஸி..’ இன்று(12.11.2024) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.