இந்திய திரையுலகில் பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல் விவகாரம் தற்போது அதிகம் வெளிச்சத்திற்கு வருகிறது. இதற்கு முன்னோடியாக கேரளாவில் சமீபத்தில் வெளியான ஹேமா கமிட்டி ஆய்வறிக்கை அமைந்துள்ளது. இந்த அறிக்கையில் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் நடிகைகளிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து பொது வெளியில் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல்களை வெளிப்படையாக தெரிவித்து வரும் நிலையில் சம்பந்தப்பட்ட திரை பிரபலங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கேரள சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹேமா கமிட்டி ஆய்வறிக்கையின் எதிரொலியாக தமிழ் திரையுலகில் பாலியல் புகார்களை விசாரிக்க ரோகிணி தலைமையில் முன்பு உருவாக்கப்பட்ட விசாகா கமிட்டி தற்போது தீவிரமாக செயல்பட்டு வருகிறது. தெலுங்கு திரையுலகில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான ஆய்வறிக்கையை வெளியிட கோரி பெண்கள் அமைப்பினர் கோரிக்கை வைத்தனர். மேலும் பெங்காலி திரையுலகிலும் விசாரணை குழு அமைக்க குரல்கள் எழுந்து வருகிறது.
இந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடன இயக்குநராக வலம் வரும் ஜானி மாஸ்டர் மீது பாலியல் புகார் எழுந்துள்ளது. அவருடன் பணியாற்றிய பெண் ஒருவர் கடந்த 2019ஆண்டு ஹைதராபாத், சென்னை, மும்பை என படப்பிடிப்பு சென்ற இடங்களில் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக ஆந்திரா போலீசார் ஜானி மாஸ்டர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஜானி மாஸ்டர், தமிழில் பீஸ்ட், திருச்சிற்றம்பலம், ஜெயிலர் உள்ளிட்ட பல படங்களிலும் தெலுங்கில் கீதா கோவிந்தம், புஷ்பா, வைகுண்டபுரம் உள்ளிட்ட பல படங்களில் பணியாற்றியிருந்தார். இதில் திருச்சிற்றம்பலம் படத்திற்காக அவருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.