உலக புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர்களில் ஒருவர் ஜேம்ஸ் கேமரூன். காலத்தை மிஞ்சிய கிரியேட்டிவ்வான இவருடைய பிரம்மாண்ட படைப்புகளை காண கோடான கோடி ரசிகர்கள் உள்ளனர்.
ஆயிரம் கோடிகளுக்கு மேல் வசூலை வாரிகுவித்த டைட்டானிக் படத்தின் வெற்றிக்கு பின்னர் 14 வருடங்கள் கழித்து அவதார் என்னும் பிரம்மாண்ட படத்தை வெளியிட்டு மீண்டும் வசூல் சாதனை படைத்தார்.
இந்த படத்திற்கு தொடர்ச்சியாக அடுத்த நான்கு பாகங்களை ஷூட் செய்து வருகின்றனர். படத்தின் ஷூட்டிங்கிற்கு பல நெருக்கடிகள் இருப்பதால் ஒவ்வொருமுறையும் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போய்கொண்டிருக்கிறது.
தற்போது கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஷூட்டிங் நடைபெறாததால் படத்தின் ரிலீஸ் தேதி ஒரு வருடம் தள்ளிப்போயுள்ளது. 2021 டிசம்பரில் வெளியாகவிருந்த 'அவதார் 2' தற்போது 2022 டிசம்பரில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் நடிகர் அர்னால்டுடன் நடைபெற்ற கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசிய ஜேம்ஸ் கேமரூன் அவதார் படங்களின் நிலவரம் குறித்து தெரிவித்துள்ளார். அதில், “எல்லோரையும் போல எங்களையும் கோவிட் பாதித்தது, கடுமையாக பாதித்தது. நான்கரை மாதங்களை இழந்தோம். இதனால் பட வெளியீடு முழுமையாக ஒரு வருடம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பும் செய்துவிட்டோம்.
இப்போது நியூசிலாந்து படப்பிடிப்பில் இருக்கிறேன். 3ஆம் பாகத்திற்கான நடிகர்களை வைத்து முடிக்க வேண்டிய 10 சதவீதப் படப்பிடிப்பு மீதமுள்ளது. 'அவதார் 2' முழுமையாக முடிந்துவிட்டது. 3ஆம் பாகம் 95 சதவீதம் முடிந்துவிட்டது" என்று கூறியுள்ளார்.