இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் இந்தியன் 2 படத்தில் நடித்து வந்தார். இதில் கமலுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். லைகா நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. படத்தின் 60 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து, கரோனா பரவல், இயக்குநர் ஷங்கருக்கும், தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு ஆகிய பிரச்சினைகளால் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தடைப்பட்டு போனது. இதையடுத்து பிரபல தெலுங்கு நடிகர் ராம் சரண் நடிக்கும் படத்தை ஷங்கர் இயக்க உள்ளதாக அறிவித்தார். இதனால் 'இந்தியன் 2' படம் மீண்டும் தொடங்கப்படுமா எனப் பலரும் கேள்வி எழுப்பி வந்தனர்.
இதனிடையே லைகா நிறுவனம் 'இந்தியன் 2' படத்தை முடித்த பிறகுதான் ஷங்கர் வேறு படத்தை இயக்க வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதன்பிறகு இயக்குநர் ஷங்கர் பதில் மனுவைத் தாக்கல் செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் ஓய்வுபெற்ற நீதிபதி பானுமதி தலைமையில் சமரச பேச்சுவார்த்தை நடத்தும் படி உத்தரவிட்டது. அதன்பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஷங்கர் வேறு படத்தை இயக்குவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை என லைகா நிறுவனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் 'இந்தியன் 2' படத்தை முடித்துக் கொடுப்பதாக ஒத்துக் கொண்டார்.
இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஷங்கருக்கும் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்பட்டுள்ளதால் இந்தியன் 2 படப்பிடிப்பை விரைவில் தொடங்க ஷங்கர் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. நடிகர் கமல்ஹாசன் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருவதால், அப்படத்தின் பணிகள் முடிந்த பிறகு 'இந்தியன் 2' படப்பிடிப்பு கலந்து கொள்வார் எனக் கூறப்படுகிறது. இதனிடையே ஷங்கர், ராம் சரண் படத்தை இயக்கி வருகிறார். இந்த இரு படங்களின் பணிகள் முடிந்த பிறகு இருவரும் 'இந்தியன் 2' படத்தில் கவனம் செலுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.