4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெறும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பங்கேற்கின்றன.
இந்தியாவை பொறுத்தவரை இதுவரை விளையாடிய 2 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்றாவது போட்டி நாளை மறுநாளான 14 ஆம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த போட்டி முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அதனால் ஐசிசி மற்றும் பிசிசிஐ பிரம்மாண்டமாக இந்தப் போட்டியை நடத்த திட்டமிட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
மேலும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் ரஜினிகாந்த் ஆகியோருக்கு இந்தப் போட்டியைக் காண பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா நேரில் சென்று கோல்டன் டிக்கெட்டை வழங்கினார். அதன்படி மூவரும் கலந்துகொள்கின்றனர். இதனால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளிலிருந்து 11,000 பாதுகாவலர்கள் ஈடுபடவுள்ளனர். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னதாக பிரபல பாடகர் அர்ஜித் சிங் பாடவுள்ளார். இப்போட்டி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.