உத்தரப் பிரதேசம், அயோத்தியில் இன்று மிகப் பிரம்மாண்டமாக ராமர் கோவில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. பிரதமர் மோடி ராமர் சிலையை பிரதிஷ்டை செய்து நிறுவியுள்ளார். இந்த நிகழ்வில், இந்தியாவில் உள்ள முக்கிய பிரபலங்கள், திரை நட்சத்திரங்கள், விளையாட்டுப் பிரபலங்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். இதே வேளையில் சென்னை தேனாம்பேட்டையில் இருக்கும் நாரத கான சபாவில், சென்னையில் அயோத்தியா என்ற நிகழ்வு நடைபெற்று வருகிறது. இதில் ஆளுநர் ரவி, இசையமைப்பாளர் மற்றும் எம்.பி இளையராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது இளையராஜா பேசுகையில், “இன்றைய நாள் சரித்திரத்தில் மிகவும் முதல் முறையாக நடக்கின்ற நாள். சரித்திரம் என்று சொல்லும் போது, தமிழ்நாடு மட்டுமல்ல. இந்தியாவை தாண்டி உலகம் முழுவதும், வரலாற்றிலே முதல் முறையாக ஒரே ஒரு நிகழ்ச்சி நடக்கிறது என்றால், அது இன்றைய நாள் தான். அது சரித்திரத்தில் என்றும் அழியாத புகழாக இருக்கும். இந்த காரியத்தை முடித்த பிரதமர் மோடிக்கு சேர்த்து தரும். யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம். யாரால் முடியும். யாராலும் பண்ண முடியாது. இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள். அவர்கள் என்ன செய்தார்கள். எது சரித்திரத்திலே நிற்கிறது. இவையெல்லாம் கணக்கு போட்டு பாருங்கள். மோடி செய்த காரியம் இருக்கிறதே... சொல்லும் போது கண்ணீல் நீர் வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனக்கு மன நிறைவை தருகிறது. அதே சமயம் அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இங்கே இருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது. இருந்தாலும் உங்கள் முன் இருக்கிறது கொஞ்சம் ஆறுதலை தருகிறது.
இந்தியாவில் நிறைய கோவில்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோவிலும், ஒவ்வொரு மன்னன் கட்டியது. ஆனால் இந்தியாவிற்கே முழுமையாக ஒரு கோவில் எழுந்திருக்கிறது என்றால், அது இந்த கோவில் தான். பாண்டிய மன்னர்கள் மீனாட்சி கோவில் கட்டினார்கள். பாண்டிய பரம்பரைகள் எல்லாம் மீனாட்சி கோவிலை வணங்கி வந்தது. அதே போல் சோழ தேசத்தில் ராஜ ராஜ சோழன், பிரகதீஸ்வரர் கோவிலை கட்டினார். உலகம் முழுக்க பிரசித்தி பெற்றது. ஆனால், உலகத்திலே ஸ்ரீ ராமருக்காக, அவர் பிறந்த இடத்திலேயே கோவில் கட்டியது அதிசயம். அதை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மன்னர்கள் செய்த வேலையை நம் பிரதமர் செய்திருக்கிறார்” என்றார்.