“உலகத்துல எவ்வளவோ பொண்ணுங்க இருந்தும், நான் ஏன் சார் ஜெஸ்ஸிய லவ் பண்ணேன்” - தான் காதல் வயப்பட்ட காரணத்தைத் தேடும் ஒவ்வொரு தமிழ் இளைஞனும் தன் வாழ்வில் ஒருமுறையேனும் முனுமுனுத்திருக்கக்கூடிய வசனம் இது. காதலிக்கும் இளைஞர்கள் ஒவ்வொருவரும் தன்னை திரைப்படத்தில் வரும் நாயகர்களுடன் ஒப்பிட்டுக்கொள்வார்கள். அந்த வகையில் 90ஸ் கிட்ஸ் பெரும்பாலும் தன்னை ஒரு கௌதம் மேனன் பட கதாநாயகனாகவே நினைத்துக்கொண்டு காதலிப்பவர்கள். 90ஸ் கிட்ஸ்ஸாக இருந்துகொண்டு காதலிக்கும் ஒவ்வொரு இளைஞனுக்குள்ளும் ராஜேஷ், கார்த்திக், சூர்யா ஆகிய ஜிவிஎம் பட கதாநாயகர்களின் காதல் அனுபவங்களின் தாக்கம் இல்லாமல் இருக்காது. ஜிவிஎம் தன்னுடைய முதல் படமான 'மின்னலே'வில் இருந்தே இந்தத் தாக்கத்தை இளைஞர்களுக்குக் கொடுக்கத் தொடங்கிவிட்டார். இளைஞர்களுக்குள் இருக்கும் கனவு, காதல், உணர்வு என அனைத்தும் அவருடைய படங்களில் வேறு மாதிரியாக, இன்னும் அழகாகப் பார்க்க முடியும்.
ஜிவிஎம் படத்தில் நாயகிகள் அவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்பதைதாண்டி அவர்களின் கதாப்பாத்திர கட்டமைப்பு என்பது வேறு லெவலுக்கு அழுத்தமாக இருக்கும். குறிப்பாக தமிழ் சினிமாவில் ஹீரோ இரண்டு காதல் செய்திருந்தாலும் அவன் காதலிக்கும் ஹீரோயின் இவரை மட்டுமே காதலிப்பதாகக் காட்டுவார்கள். அப்படித்தான் காலம் காலமாக இருந்தது என்று சொல்லலாம். ஆனால், ஜிவிஎம்தான் சிங்கிள் மதராக இருக்கும் ஹீரோயினை ஹீரோ காதலிப்பது போன்று கதையமைத்தார். இது ஒரு பெரிய மாற்றத்தையே கொடுத்தது எனலாம். மணிரத்னம் அவருடைய தொடக்க காலகட்டத்தில் எப்படி 'மௌனராகம்' படத்தில் காதல் தோல்வி அடைந்த ஹீரோயின் வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார் என்று காட்டினாரோ அதேபோன்றதுதான் சிங்கிள் மதராக இருக்கும் ஹீரோயின் மறுமணம் செய்துக்கொள்வதுபோல காட்டுவதும். அவர்களுக்குள்ளும் காதல் இருக்கிறது. அவர்கள் காதலும் அழகுதான் என்பதை மக்கள் ரசிக்கும்படி காட்டியவர் ஜிவிஎம். 'வேட்டையாடு விளையாடு' படத்தில் சிங்கிள் மதராக இருக்கும் ஜோதிகாவை கமல் காதலிப்பார். இதேபோன்றுதான் 'என்னை அறிந்தால்' படத்தில் அஜித்திற்கும் த்ரிஷாவுக்கும் இடையேயான காதலும் இருக்கும்.
வெறும் காதலை மட்டும் மையமாக வைத்து அவர் படங்கள் எடுக்கவில்லை. அதைத்தாண்டி இன்வெஸ்டிகேடிவ் த்ரில்லர் ஸ்டோரி ஜானர் படங்கள் எடுப்பதிலும் வல்லவர் ஜிவிஎம். த்ரில்லராக இருந்தாலும் காதலுக்கு முக்கியத்துவம் கொடுத்திருப்பார். வாழ்க்கையின் பாதையில் காதல் எவ்வளவு முக்கியமான திருப்பத்தை ஏற்படுத்தி நமக்குப் பாடமாக அமையும் என்பதை அழகாகவும் ஆழமாகவும் படத்தில் காட்சிப்படுத்தியிருப்பார். காதல் படங்களுக்கு காதல் காட்சிகளில் உணர்ச்சிப்பூர்வமான விஷயங்கள் எவ்வளவு முக்கியமோ அந்த வகையில் அதை கடத்த உதவும் பாடல்களும் முக்கியமானது. அந்த வகையில் ஜிவிஎம்மின் பாடல்களும் பாடல் காட்சிகளும் தனித்துவமானவை. இவருடைய பாடல்களில் வரும் அழகிய தமிழ் வார்த்தைகள், 'தமிழ், தமிழ்' என்று காது கிழிய கத்தும் இயக்குனர்களின் படங்களில் கூட இடம்பெறா. அந்தளவிற்கு இவருடைய படங்களில் பாடல்கள் தமிழ் வரிகளில் காதலை சொல்லும். இவ்வளவு ஏன் இவருடைய படங்களின் தலைப்புகளே அழகிய தமிழில் கவர்பவை.
கௌதமின் நாயகர்கள் அனைவருமே கெளதம்கள்தான். அவரது அசைவு, உடல்மொழி, பேச்சு என கையில் காப்பு வரை கமலாக இருந்தாலும் அஜித்தாக இருந்தாலும் சிம்புவாக இருந்தாலும் அவர்களுக்குள் கௌதம் இருப்பார். அவர்கள் பெரும்பாலும் மெக்கானிக்கல் எஞ்சினியரிங் படித்திருப்பார்கள். அவர்கள் பெண்களை பெரிதும் மதிப்பர், மிகுந்த அக்கறை செலுத்துவர். சின்னச் சின்ன விஷயங்களையும் கவனித்து, பெருங்காதல் செய்வர். அதே நேரம் சமூக விரோதிகள், வில்லன்களை வெளுத்து வாங்குவர். கெட்ட வார்த்தை பயன்படுத்தத் தயங்க மாட்டார்கள். உயர் தர உடைகள் அணிந்து மிடுக்காக சண்டையிடுவார்கள். இப்படி, கௌதமின் நாயகர்கள் தனி ரகம். அவரது நாயகிகளும் அப்படித்தான். நாயகன் பின்னே அலையும் லூசுப்பெண்கள் இல்லை. தானே சென்று காதல் செய்தாலும் தங்களுக்கென ஒரு வாழ்க்கை, சுயமரியாதை கொண்டவர்கள். இப்படி கெளதம் மேனன் தனது உலகத்தை அழகாக உருவாக்கி தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் பதிய வைத்துள்ளார். வெற்றி தோல்வி தாண்டி அவரது படங்களுக்கென ஒரு காத்திருப்பு, ஒரு வரவேற்பு இருக்கிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அவருக்கு ராயல்டி கொடுத்தாலும் தகும் எனும் அளவுக்கு கௌதமின் நாயகர்கள் கெத்தாக அந்த வண்டியை ஓட்ட, அது இளைஞர்களை கவர்ந்தது. கையில் காப்பு, ஸ்டைலுக்கு கிட்டார், நண்பர்களுடன் அமர்ந்து பாடுவது என பல பழக்கங்களை அறிமுகம் செய்யாவிட்டாலும் அதிகப்படுத்தியிருக்கின்றன இவரது படங்கள். இந்தத் தனித்தன்மை என்றும் மறக்கப்படாது, வெற்றி தோல்விகளை தாண்டியும்.