குஜராத்தில் நேற்று நடந்த சட்டசபையில் எதிர்க்கட்சி காங்கிரஸ் எம்எல்ஏ இம்ரான் கெடவாலா, "ஜூனாகத் மாவட்டத்தில் பாலிவுட் நடிகைகள் ஜெயா பச்சன், மஹிமா சவுத்ரி மற்றும் ஜூஹி சாவ்லா உள்ளிட்டோரின் பெயரில் கொரானா சான்றிதழ்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் அவர்கள் அனைவரும் குஜராத்தில் அப்போது வசிக்கவில்லை. இந்த போலி கொரோனா சான்றிதழ்கள் குறித்து என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது" என கேள்வி எழுப்பினார்.
இதற்கு, "சிறப்பு முகாம் மூலம் அடையாள அட்டை இல்லாத நபர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டது" என மாநில அரசு சார்பில் சுட்டிக்காட்டப்பட்டது. இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ருஷிகேஷ் பட்டேல், "ஏழைகள், புலம் பெயர்ந்தவர்கள் என அடையாள ஆவணங்கள் இல்லாத பலரும் அந்த சிறப்பு முகாமில் கலந்துகொண்டனர். மேலும் அவர்களுக்காக ஒரு சிறப்பு முகாமை குஜராத்தில் நடத்தினோம்" என்றார்.
மேலும், ஒருவர் தடுப்பூசி போடுவதற்காக 15 ஏழை, பிச்சைக்காரர்கள் அல்லது துறவிகள் அல்லது புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அழைத்து வந்து அவர்களிடம் ஆதார் அட்டை இல்லாத பட்சத்தில் அழைத்து வந்தவர் சொல்கிற பெயர்களில் தான் தடுப்பூசிகள் போடப்படும். இந்த போலி விவகாரம் ஜுனாகத்தின் இரண்டு தாலுகாக்களில் மட்டும் தான்" என்றார். பின்பு பிரபலங்களின் போலி கொரோனா தடுப்பூசி சான்றிதழ்கள் குறித்து விசாரணை நடத்த குஜராத் அரசு உத்தரவிட்டுள்ளது.