‘நந்தன்’ படத்தின் வெற்றியைத் தொடந்து அப்படத்தின் இயக்குநர் இரா. சரவணனை நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாகப் பேட்டி கண்டோம். அப்போது அவர் தன்னுடன் பணியாற்றிய திரைக் கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சூரி உடன் பணிபுரிந்த அனுபவங்களைப் பேசியபோது, சூரி நடிப்பில் மிகவும் ஆர்வமிக்கவர். எதாவது ஒரு காட்சியில் நடித்த பிறகு படக்குழு மொத்தமும் அவரை கை தட்டி பாராட்டுவார்கள். ஆனால் அவர், இன்னும் கொஞ்சம் சரியாக நடித்திருக்கலாம் என்று யோசிப்பார். அவர் ‘கத்துக்குட்டி’ படம் நடித்தபோது ஹீரோவாக நடிக்க முயற்சி செய்யுங்கள் என்றேன். அதை அவர் கேட்டுவிட்டு பயங்கரமா சிரிப்பார். பிறகு நான் சூரிக்கு ஸ்டைலாக ஒரு ஆடையை அணிவித்து கத்துக்குட்டி புரமோஷன் வீடியோ பண்ணுவோம் என்றேன். அதற்கு அவர் இருக்கின்ற பிழைப்பை கெடுத்துவிட்றாத தம்பி என்று சொல்லிக் கெஞ்சி, கதாநாயகனாக முயற்சி செய்தாலே தூக்கி ஓரமாக வைத்து விடுவார்கள். அதனால் பண்ண வேண்டாம் என்றார். ஒரு வழியாக நான் அவரை ஒப்புக்கொள்ள வைத்தேன் அதன் பிறகு அந்த லுக் சூரிக்கு அருமையாக இருந்தது. அதை அப்படியே படத்தின் போஸ்டராக அவர் பிறந்தநாளுக்கு ரிலீஸ் செய்தோம். அந்த போஸ்டரை பேனராக சிவன் பார்க் பகுதியில் வைத்தோம். அதை பார்த்த அவர், தம்பி நான் கோயிலுக்குள் சென்று வரும்போது அந்த பேனரை எடுத்து விடுங்கள் என்று காருக்குள் குனிந்தபடி கூச்சப்பட்டு பேசினார். ஏன் என்று கேட்டபோது, பேனர் இருந்த இடத்திலுள்ள டீ கடையில் பெஞ்சில் படுத்துக்கொண்டு சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் இருந்ததை கூறினார். இன்றைக்கும் கோரைப் பாயில்தான் தூங்குவார். காலத்துக்கும் அந்த குணம் அவரைவிட்டுப் போகாது. அந்தளவிற்கு எளிமையான மனிதர்.
இயக்குநர் அ. வினோத் உடன் பழகிய அனுபவங்களைச் சொல்லும்போது, இப்படி ஒரு மனிதன் இருப்பாரா என்று கற்பனை செய்து பார்க்க முடியாது. அப்பேர்பட்ட மனிதன், துறவி, சாமியார், இயக்குநர் தான் வினோத். எந்த எதிர்வினையும் ஆற்றாமல் எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளக்கூடிய மனநிலை நமக்கு எப்போது வாய்க்கும் என்று ஒருமுறை கேட்டார். அதற்கு நான், என்னங்க இப்படி கேட்குறீங்க என்றதும் அவர், ஒரு மரத்தை வெட்டினாலும், குத்தினாலும் அது இருக்கும் உருவத்திற்கு என்ன வேண்டுமானாலும் பண்ணலாம். ஆனால், அந்த மரம் சிலையைபோல் அப்படியே இருக்கிறது. இது போன்ற மனநிலைதான் வேண்டும் என்பார். முன்னணி நடிகர்களை இயக்கும் இயக்குநர் என்ற புகழ்ச்சியெல்லாம் ஒரு அங்கீகாரமே கிடையாது என்று நினைப்பார். இந்த பக்குவம் ஒரு மனிதனுக்கு 60,70 வயதில்தான் வரும். அந்த வயதில்கூட பக்குவம் வராமல் கடைசிவரை புகழ்ச்சிக்கு ஆசைப்பட்டு எத்தனையோ நபர்கள் இறந்திருக்கிறார்கள். ஆனால், வினோத் அந்த புகழ்ச்சிகளைப் பெரிதாக நினைக்க மாட்டார். கண்காணாத பகுதிக்குச் சென்று 10 செண்ட் நிலத்தில் வீட்டைக் கட்டி எளிமையான வாழ்க்கையை வாழ வேண்டுமென்று கூறுவார். அதை இன்னும் 5 வருடங்களில் நிறைவேற்றவுள்ளதாகச் சொன்னார். பலமுறை என்னிடம், திரைப்படங்கள் எடுப்பதை நிறுத்துவது குறித்து பேசியிருக்கிறார். திரைப்பயணத்திற்கான ஓட்டத்தில் ஓடமுடியவில்லையென்றும் கூறியிருக்கிறார்.
சிவகார்த்திகேயன் உடனான அனுபவத்தைப் பகிர்ந்தபோது, இவரின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவே முடியாது. எதிர்வினைகளை நேர்த்தியாகக் கையாளக்கூடியவர். அவருக்கு ஒரு பிரச்சனை வந்தபோது அதை அப்படி அவர் தாக்குபிடித்து கையாளப் போகிறார் என்று நினைத்தேன். ஆனால் அவர், அதற்கு வேறொரு விளக்கம் கொடுப்பார். அது பயங்கரமாக இருக்கும். அதே சமயம் நிறைய நபர்களுக்கு அவர் உதவி செய்து வருகிறார். அது பெரும்பாலும் வெளியில் தெரியாது. நான் எதாவது அவரின் கவனத்திற்கு எடுத்துச் சென்றால் அடுத்த நிமிடமே உதவி செய்துவிடுவார். ஒரு விமர்சனத்தை எப்படி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் அதை மாற்றிக் காண்பிப்பதிலும் தெளிவானவர். அதன் பிறகு சமுத்திரக்கனியுடன் பணியாற்றியது குறித்துப் பேசுகையில், நந்தன் படத்தில் வரும் நல்ல கதாபாத்திரத்தைப்போல நிஜ வாழ்க்கையிலும் மிகவும் நல்லவராக சமுத்திரக்கனி இருப்பார். 3 நாள் அவரிடம் கால்ஷீட் கேட்டேன். பிசியாக இருந்த சமயத்திலும் எனக்காக நேரம் ஒதுக்கி பணம் வாங்காமல் நடித்துக் கொடுத்தார். சில படங்களுக்காக அவர், 5 கோடி சம்பளம் வாங்கியிருந்தாலும் சரியாகத் தனது உழைப்பைக் கொடுத்திருக்க மாட்டார். ஆனால் என்னுடைய படத்திலுள்ள கதாபாத்திரம் அவருக்குப் பிடித்ததினால் அந்த கதாபாத்திரத்திற்கேற்ப நல்ல உழைப்பைக் கொடுத்தார். சினிமாவில் போராடினால் வெற்றி பெற முடியும் என்பதற்கு சிறந்த உதாரணம் சமுத்திரக்கனிதான்.
ஜோதிகாவுடன் பணியாற்றிய அனுபவத்தைப் பற்றி பேசும்போது, என்னுடைய ‘உடன் பிறப்பே’ படத்திற்கான படப்பிடிப்பு தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நான் பெரும்பாலும் துணை நடிகர்களைவிடப் பொதுமக்களைப் படங்களில் காட்சிப்படுத்துவதிலும் பொதுமக்களை நடிகர்களும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆர்வமுடையவன் . அதனால் மருத்துவமனையில் அனுமதி வாங்கி படமெடுத்தோம். படப்பிடிப்பு முடிந்த பிறகு படுக்கை வசதியில்லாமல் ஒரு பெண் தனது ஒரு மாதக் கை குழந்தையுடன் வராண்டாவில் உட்கார்ந்திருந்தார். அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஜோதிகா, அருகிலிருந்த பெரிய கோயிலைப் பார்த்தார். உலக புகழ்பெற்ற கோயிலுக்கு அருகில் தரமான மருத்துவமனை இல்லையா என்று கேட்டார். அதற்கு நான், அருகில் இருக்கும் மாவட்டங்களில் இருக்கும் மருத்துவமனையைவிட இங்குதான் ஓரளவிற்கு வசதி இருக்கிறது என்றேன். அது அவர் மனதில் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. என்னிடம் கேட்ட இந்த கேள்வியை பொது மேடையில் அவர் பேசிய பிறகு அந்த விஷயம் பெரிய அளவில் பேசப்பட்டது. ஆனால் ஜோதிகாவுக்கு எதிராக வந்த விமர்சனங்களை அவர் பெரிதா எடுத்துக்கொள்ளவில்லை. மனதில் பட்டதைப் பேசினதாக என்னிடம் கூறினார். அதோடு மட்டுமில்லாமல் அந்த மருத்துவமனையைச் சீரமைக்க உடனடியாக ரூ.25 லட்சம் நிதி வழங்கினார். ஜோதிகா இயல்பாகவே இரக்கக் குணமுடையவர் என்றார்.