Skip to main content

"கமல்ஹாசனை அமைச்சர் ஆக்குங்க" - முதல்வருக்கு இயக்குநர் திடீர் கோரிக்கை

Published on 23/12/2022 | Edited on 23/12/2022

 

director Alphonse Puthren request to the chief minister to appoint kamal asa cinema welfare minister

 

நேரம் படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். அப்படத்தைத் தொடர்ந்து அவர் இயக்கிய பிரேமம் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து பிரித்திவிராஜ் மற்றும் நயன்தாராவை வைத்து 'கோல்ட்' படத்தை இயக்கினார். சமீபத்தில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. 


சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து ஆக்ட்டிவாக இருக்கும் அல்போன்ஸ் புத்திரன், தனது படங்கள் குறித்தும்  அவ்வப்போது தமிழ்த் திரைப் பிரபலங்கள் குறித்தும் பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் கமல்ஹாசனை அமைச்சராக்க வேண்டும் என முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு திடீரென கோரிக்கை வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதிக்கும் ஒரு வேண்டுகோள். சினிமாவுக்கு என்று ஒரு தனித் துறையை உருவாக்கி அல்லது அறிமுகப்படுத்தி அதற்கு கமல்ஹாசனை அமைச்சராக நியமிக்கவும். நீங்கள் அதை செய்தால், சினிமா மென்மேலும் செழித்து வளம் பெறும். மேலும் சினிமாவின் வியாபாரம் 10 மடங்கு அதிகமாகும். வியாபாரம் அதிகமாக இருந்தால் அரசுக்கும் மக்களுக்கும் நேரடியாக பயன் தரும். 

 

ஏன் கமல்ஹாசன் என்றால், இந்த உலகத்துலயே சினிமாவில் திரைக்கதை எழுதுவது, படம் தயாரிப்பது, மேக்கப் போடுவது, பாடுவது, ஆடுவது, மாஸ் மற்றும் கிளாஸ் படங்கள் பண்ணுவது, படம் இயக்குவது என அனைத்தையும் தெரிந்த ஒரே நபர் கமல் தான். மேலும் உலகிலேயே சிறந்த நடிகர் அவர்தான். பொறுமையான, சகிப்புத்தன்மை கொண்ட ஒரு சினிமா ஆசிரியராக வலம் வருகிறார். தனது தனிப்பட்ட மற்றும் தொழில் சார்ந்த வாழ்க்கையில் அதிக நேரத்தை சினிமாவுக்காக செலவிட்டவர். எனவே சினிமாவின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு வரிவிலக்கு எளிமைப்படுத்த இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்யுங்கள். சினிமாவில் சேர விரும்பும் அனைத்துக் குழந்தைகளும் உலகின் மிகச்சிறந்த மாஸ்டரிடம் கற்றுக்கொள்வோம்" எனப் பதிவிட்டுள்ளார். அல்போன்ஸ் புத்திரனின் இந்தப் பதிவு பலரின் கவனத்தைப் பெற்று தற்போது வைரலாகி வருகிறது. 

 

 


 

சார்ந்த செய்திகள்