கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நீண்ட காலமாக உருவாகி வரும் படம் 'துருவ நட்சத்திரம்'. இப்படத்தில் ரிது வர்மா, ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், சிம்ரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கெளதம் மேனன் நிறுவனம் மற்றும் இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் 90 சதவிகித படப்பிடிப்பு முடிந்த நிலையில், சில பிரச்சனைகள் காரணமாக கடந்த 2017 ஆம் ஆண்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படாமல் இருந்தது. பின்பு அனைத்து பிரச்சனைகளும் முடிந்து படத்தின் அப்டேட் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருந்தது. ஒருவழியாக வருகிற 24ஆம் தேதி நாளை இப்படம் திரைக்கு வருவதாக படக்குழு அறிவித்தது.
இந்த நிலையில், இந்தப் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்கக்கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவில், “சூப்பர் ஸ்டார் என்ற தலைப்பில் சிம்புவை வைத்து படம் இயக்க கௌதம் மேனன் கடந்த 2018ஆம் ஆண்டு 2 கோடியே 40 லட்சம் ரூபாய் பெற்றுக் கொண்டார். ஆனால் பட வேலைகள் நடைபெறாத நிலையில், கௌதம் மேனன் முன்பணத்தை திருப்பி தரவில்லை. எனவே அந்த தொகையை திருப்பி அளிக்காமல் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதி சரவணன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நாளை காலை 10.30 மணிக்குள் 2 கோடியே 40 லட்ச ரூபாய் பணத்தை கௌதம் மேனன் திருப்பி அளிக்க வேண்டும். மேலும் தொகையை கொடுக்காமலிருக்கும் பட்சத்தில் துருவ நட்சத்திரம் படத்தை இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வெளியிடக்கூடாது என உத்தரவிட்டுள்ளார்.