கடந்த மூன்று வருடங்களாக உலகப்புகழ் பெற்ற பிக்பாஸ் போட்டி தமிழிலும் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தப் போட்டியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். தற்போது தமிழில் நான்காவது சீஸன் ஒளிபரப்பாகி வருகிறது. அதைபோன்று தெலுங்கிலும் 4வது சீஸன் ஒளிப்பரப்பாகி வருகிறது.
16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியை நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வந்தார். கடந்த வாரம் அவர் படப்பிடிப்புக்காக வெளிநாடு சென்றுவிட்டதால் அவருக்குப் பதில் சமந்தா தொகுத்து வழங்கி வருகிறார்.
தெலுங்கு 'பிக்பாஸ் - 4' நிகழ்ச்சி ஆரம்பித்து 53 நாட்கள் ஆன நிலையில் நேற்று போட்டியாளர்களில் ஒருவரான நோயல் சீன், பாதியில் வெளியேறினார். அவருக்குத் திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்தனர். பரிசோதனையின் முடிவில் அவர் மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டும் என அவர்கள் தெரிவித்ததையடுத்து அவர் போட்டியிலிருந்து வெளியேறினார்.
இதற்கு முன்னர் கங்கவா என்ற போட்டியாளர் 34-ஆவது நாளிலேயே உடல் நலக்குறைவால் போட்டியிலிருந்து பாதியில் வெளியேறினார். இவர்கள் இருவருக்கும் கரானோ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கெனவே 8 பேர் வெளியேற்றப்பட்டு விட்டனர். இதுதவிர உடல்நலக் குறைவால் 2 பேர் வெளியேறியுள்ளனர். தற்போது வெறும் 6 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டில் உள்ளனர். இன்னும் 47 நாட்கள் இருப்பதால் 'வைல்ட் கார்ட்' என்ட்ரியாக சிலரை பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்ப வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.