இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தவும், தொண்டர்கள் மத்தியில் எழுச்சியை ஏற்படுத்தவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ எனும் பெயரில் இந்தியா முழுவதும் பாதயாத்திரை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி, கன்னியாகுமரியில் தொடங்கிய இந்தப் பயணத்தை கேரளா, ஆந்திரா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது தெலுங்கானா மாநிலத்தில் ராகுல்காந்தி நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த நடைப்பயணத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகிறது. மேலும் அந்த வீடியோக்களில் சில திரைப்பட பாடல்கள் பின்னணியில் சேர்த்து எடிட் செய்தும் வெளியிட்டு வருகிறார்கள். அதில் ஒரு வீடியோவில் ராக்கி பாய் கதாபாத்திரத்தில் யஷ் நடித்து பிரபலமான 'கே.ஜி.எஃப் 2' படத்தின் பாடலைப் பயன்படுத்தியுள்ளனர்.
இந்நிலையில், பெங்களூருவைச் சேர்ந்த 'எம்.ஆர்.டி' என்ற மியூசிக் நிறுவனம், காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, சுப்ரியா ஸ்ரீநேட் மற்றும் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோரின் மீது காப்புரிமை மீறல் புகார் கொடுத்துள்ளது. அந்தப் புகாரில், "கே.ஜி.எஃப் 2 படத்தின் இந்தி பாடல்களை பெரும் தொகை கொடுத்து வாங்கியுள்ளோம். இந்தச் சூழலில் தங்களது அனுமதி பெறாமல் அந்த பாடல்கள் ராகுல் காந்தி நடைப்பயண வீடியோக்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்தப் புகார் தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மீதும், அந்த கட்சியைச் சார்ந்த மூன்று தலைவர்களின் மீதும், ஐ.பி.சி.யின் கீழ் மூன்று பிரிவுகளிலும், காப்புரிமைச் சட்டத்தின் கீழ் இரண்டு பிரிவுகளிலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.