உலகம் முழுவதும் கோடிக்கணக்கான இசை ரசிகர்களை வைத்துள்ளது தென் கொரியாவை சேர்ந்த பிடிஎஸ்(BTS) பாப் இசைக்குழு. வசீகர தோற்றம், லிப்ஸ்டிக், கடுக்கன், பலரையும் கவரும் குரல் என 7 பேர் கொண்ட இந்த பிடிஎஸ் இசைக்குழு ஏராளமான பாடல்களை பாடியுள்ளனர். இவர்கள் பாடும் பாடல்கள் அனைத்துமே யூடியூபில் மில்லியன் கணக்கில் பார்வையாளர்களைக் கடந்து ஏகப்பட்ட ரசிகர்களை வைத்துள்ளனர். இவர்களால் தென்கொரிய அரசாங்கத்திற்கு பில்லியன் டாலர் கணக்கில் வருவாய் கிடைத்து வருகிறது.
இந்நிலையில் பிடிஎஸ் இசைக்குழுவின் அறிவிப்பு தென்கொரிய அரசையும் தாண்டி, உலகளவில் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. கடந்த 9 வருடங்களாக இணைந்து பிடிஎஸ் என்ற பெயரில் இசைக்குழுவை நடத்தி வந்த 7 பேரும் தனியாக பிரிந்து செயல்பட போவதாக அறிவித்துள்ளனர். இருப்பினும் நாங்கள் பிடிஎஸ்(BTS) பாப் இசைக்குழுவை கலைக்கவில்லை, காலவரையற்ற பிரிவில் செல்கிறோம், மீண்டும் தேவைப்படும் பட்சத்தில் ஒன்றாக இணைந்து செயல்படுவோம் என்று கூறியுள்ளனர். இது அவர்களின் கோடிக்கணக்காக இசை ரசிகர்களுக்கு சற்று ஆறுதலாக அமைந்துள்ளது. நேற்று(15.6.2022) நடைபெற்ற ஆண்டு விழாவில் பேசிய பிடிஎஸ்(BTS) பாப் குழுவினர்,"ஒன்றாக செயல்பட்டால் தனிப்பட்ட முறையில் வளர்ச்சி காணமுடியவில்லை, அதனால் தனித்து செயல்பட முடிவெடுத்துள்ளோம்" என்றனர். பிடிஎஸ்(BTS) பாப் இசைக்குழுவின் இந்த முடிவு கோடிக்கணக்கான ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.