திரைத்துறையில் சிவாஜி கணேசன் நடிப்பில் வெளியான 'கந்தன் கருணை' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமானவர் ஸ்ரீதேவி. பின்பு பல படங்களில் நடித்து கதாநாயகியாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் எனப் பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்தார். 1996இல் போனி கபூரை மணந்தவருக்கு ஜான்வி மற்றும் குஷி என இரண்டு பெண் பிள்ளைகள் இருக்கின்றனர்.
2018இல் துபாயில் இருந்தபோது ஓட்டல் அறையில் உள்ள பாத்ரூமில் குளிக்கச் சென்றவர் குளியல் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டார். குளியல் தொட்டியில் எதிர்பாராத விதமாக விழுந்து இறந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இது திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. மேலும் பல்வேறு பேச்சுக்கள் இருந்து வந்தது.
இந்த நிலையில், ஸ்ரீதேவி மரணம் குறித்து சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார் போனி கபூர். அவர் பேசுகையில், "முதலில், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல. அது விபத்தால் ஏற்பட்டது. அதைப் பற்றி பேச வேண்டாம் என்று முடிவு செய்தேன். ஏனென்றால் ஏற்கனவே 24 முதல் 48 மணி நேரங்களுக்கு மேல் என்னிடம் நடந்த விசாரணையில் பேசிவிட்டேன். இந்திய ஊடகங்களின் அழுத்தம் காரணமாக தான் நாங்கள் செல்ல வேண்டியிருந்ததாக துபாய் போலீசார் என்னிடம் தெரிவித்தனர். நான் ஏற்கனவே நிறைய சொல்லிவிட்டேன். அதை தவிர வேறெதுவும் சொல்வதற்கு இல்லை என அவர்களிடம் சொன்னேன்.
பின்பு இறப்பில் எந்த சந்தேகமும் இல்லை என அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அதே வேளையில் அங்கு நான் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டேன். பிரேதப் பரிசோதனை அறிக்கையிலும் நீரில் மூழ்கி விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. அவர் பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்றும் திரையில் நல்ல உடல் நளினத்தோடு தோன்ற வேண்டும் என்றும் விரும்பினார். அதற்காக 46 - 47 கிலோவாக உடல் எடையை குறைத்தார். அது ‘இங்கிலீஷ் விங்கிலீஷ்’ படத்தில் அவரை பார்த்தால் தெரியும்.
இந்த சம்பவத்திற்கு முன்பு, அவருக்கு பல சந்தர்ப்பங்களில் சட்டென மயக்கமாகும் நிலைக்கு சென்றிருக்கிறார். மேலும் அவருக்கு ரத்த அழுத்தம் குறைவாக இருக்கும் பிரச்சனை இருப்பதாக டாக்டர் சொல்லிக்கொண்டே இருந்தார். அதனால் கடுமையான டயட்டை பின்பற்ற வேண்டாம் என அறிவுறுத்தினார். இதேபோல் ஒரு படத்திற்காக கடுமையான டயட்டில் இருந்தபோது, அப்போதும் குளியலறையில் ஒருமுறை விழுந்து பல் உடைந்ததாக ஸ்ரீதேவி இறந்த பின் நடிகர் நாகார்ஜுனா என்னிடம் தெரிவித்தார்" எனப் பேசினார்.