Skip to main content

"பெரிய ஹீரோக்களே இப்படித்தான்" - கால்ஷீட் பிரச்சனை குறித்து வருத்தப்பட்ட போனி கபூர்

Published on 09/11/2022 | Edited on 09/11/2022

 

Boney Kapoor slams big actors for completing films in 25-30 days

 

இந்தியில் முன்னணி தயாரிப்பாளராக இருக்கும் போனி கபூர் தமிழில் அஜித் நடிப்பில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 'வலிமை', 'நெஞ்சுக்கு நீதி' மற்றும் 'வீட்ல விசேஷம்' உள்ளிட்ட படங்களைத் தயாரித்தார். 

 

இப்போது மீண்டும் அஜித்துடன் மூன்றாவது முறையாக இணைந்து 'துணிவு' படத்தைத் தயாரித்து வருகிறார். இப்படத்தை எச்.வினோத் இயக்க கதாநாயகியாக  மஞ்சு வாரியர் நடிக்கிறார். இப்படம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டிய நிலையில் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. 

 

இந்நிலையில் போனி கபூர் தயாரிப்பில் அவரது மகள் ஜான்வி கபூர் நடிப்பில் சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான  படம் ‘மிலி’. இப்படம் மலையாளப் படமான 'ஹெலன்' படத்தின் இந்தி ரீமேக் ஆகும். இந்தப் பட ப்ரோமோஷனுக்காக ஒரு நிகழ்ச்சியில் போனி கபூர் பேசியது தற்போது வைரலாகி வருகிறது. அவர் அந்த நிகழ்ச்சியில், "பெரிய ஹீரோக்கள் சிலர் 25 - 30 நாட்களுக்கு தங்களது கால்ஷீட்டை ஒதுக்கிவிட்டு முழுச் சம்பளத்தையும் கேட்கிறார்கள். தொடக்கத்திலிருந்தே அவர்கள் செயல்பாடுகள் சரியில்லை. நான் எந்த நடிகரையும் இங்குக் குறிப்பிடவில்லை. ஆனால் சிலர் இப்படித்தான் செய்கிறார்கள். 

 

அவர்கள், தங்களது வசதியைத்தான் முதலில் பார்க்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஒரு நடிகர், இயக்குநருடனும் தயாரிப்பாளருடனும் ஒத்துப் போகவில்லை என்றால் அந்தப் படம் தோல்விதான் அடையும். இதனைப் பல ஹீரோக்கள் படங்களில் நான் பார்த்திருக்கிறேன்" எனப் பேசியுள்ளார்.  

 

போனி கபூர் எந்த நடிகரையும் குறிப்பிடவில்லை என்றாலும் இதைக் கேட்ட இணையவாசிகள் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமாரைத்தான் போனி கூறுகிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர். அக்ஷய் குமார்தான் குறைந்த தேதியில் படத்தை முடித்துவிட்டு அடுத்தடுத்து தொடர்ச்சியாகப் படங்களை வெளியிடுவார் என பாலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்