கடந்த 2017ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் நடைபெற்று வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி, தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. சமீபத்தில் 7வது சீசன் முடிந்தது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு சீசனாக நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் பல்வேறு போட்டியாளர்கள் கலந்து விளையாடி, கடைசி நாளான 100வது நாள் அன்று ஒரே ஒரு போட்டியாளர் வெற்றி பெற்று பரிசுகளைப் பெறுவார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் சில போட்டியாளர்கள் வெற்றி பெற முடியாவிட்டாலும் மக்கள் மனதில் வென்று புகழ் பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், முதல் சீசனில் வெற்றி பெற்ற ஆரவ், கலகத்தலைவன் படத்தை தொடர்ந்து தற்போது அஜித் நடிப்பில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். அதே போல், மூன்றாவது சீசனில் கலந்து கொண்ட கவின், லிப்ட், டாடா மற்றும் ஸ்டார் படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருகிறார். பல போட்டியாளர்கள் கலந்து கொண்டு புகழ் பெற்றாலும், ஒன்று இரண்டு போட்டியாளர்கள் மட்டுமே தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார்கள். அந்த வகையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர் ஒருவர், தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.
பிக் பாஸ் சீசன் 5இல் வெற்றி பெற்று தனது நகைச்சுவை தன்மையால் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்தவர் ராஜூ ஜெயமோகன். தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த ராஜூ, தற்போது முதல் முறையாக கதாநாயகனாக அறிமுகமாகிறார். ‘பன் பட்டர் ஜாம்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ‘காலங்களில் அவள் வசந்தம்’ படத்தை இயக்கிய ராகவ் மிர்தாத் இயக்குகிறார். பாவ்யா திரிக்கா, சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, சார்லி ஆகியோர் நடிப்பில் உருவாகும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் நிவாஸ் கே.பிரசன்னா இசையமைக்கிறார்.