தமிழில் பிக்பாஸ் நான்காவது சீஸன் தற்போது நடைபெற்றுக் கொணடிருக்கிறது. இந்த சீஸனையும் கமல்ஹாசன்தான் தொகுத்து வழங்கி வருகிறார். அதேபோல தெலுங்கு, இந்தியிலும் பிக்பாஸ் போட்டி ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.
சர்ச்சைகளுக்கு பஞ்சமில்லாத பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு மொழி ஒளிபரப்பிலும் ஒரு ஒரு சர்ச்சைகள் வெடித்து வருகிறது. அந்த வகையில் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் மராத்தி மொழியை அவமதித்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் குமார் சானுவின் மகனும் பாடகருமான ஜான் கலந்துகொண்டுள்ளார். சக போட்டியாளர் நிக்கி தம்போலி தன்னிடம் மராத்தி மொழியில் உரையாடியதற்கு ஜான் கூறுகையில், “என் முன்னால் மராத்தியில் பேச வேண்டாம். இது எனக்கு எரிச்சலூட்டுகிறது. தைரியம் இருந்தால் என்னுடன் ஹிந்தியில் உரையாடு. இல்லாவிட்டால் அமைதியாக இரு” என்றார்.
இந்த உரையாடல் ஒளிபரப்பான பிறகு மராத்தி மொழியை அவமதித்ததாக சர்ச்சை ஏற்பட்டது. இதையடுத்து தொலைக்காட்சி நிர்வாகமும் ஜானும் இதற்காக மன்னிப்பு கோரினார்கள். இன்னும் சர்ச்சை தீரவில்லை என்பதால் ஜானுக்காக அவரது தந்தையும் பிரபல பாடகருமான குமார் சானு மன்னிப்பு கோரியுள்ளார்.
இதுகுறித்து அவர் பேசுகையில், “கடந்த 41 வருடங்களாக எனக்கு தோன்றாத ஒன்றை என் மகன் பேசியுள்ளதாக அறிகிறேன். அவர்களுடன் கடந்த 27 வருடங்களாக வசிக்கவில்லை. என் மகன் என்ன சொல்லி வளர்க்கப்பட்டார் என்று எனக்கு தெரியவில்லை. அவனை அவனுடைய தாய் எப்படி வளர்த்தார் என்று தெரியவில்லை. அவன் எப்படி அப்படி பேசலாம்? மஹாராஷ்டிரா, மும்பை, மும்பை தேவி என்னை வாழ்த்தி பேரும் புகழும் அளித்துள்ளார்கள். இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளையும் நான் மதிக்கிறேன். பல மொழிகளில் நான் பாடியுள்ளேன். இதை எப்படி என் மகன் சொன்னான் எனத் தெரியவில்லை. ஒரு தந்தையாக அனைவரிடமும் நான் மன்னிப்பு கோருகிறேன்” என்றார்.