66வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகளை வழங்கி வருகிறது. விருதுகளை குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார்.
வருடா வருடம் இந்த விருது அறிவிப்பு ஏப்ரல் மாதம் நடைபெற்று மே மாதம் 3ஆம் தேதி வழங்கப்படும் ஆனால், இந்த வருடம் பொதுத் தேர்தல் நடைபெற்றதால் இது தள்ளிவைக்கப்பட்டது. விரைவில் விருது வழங்கும் நாள் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறந்த மாநில படங்களில் தமிழுக்கான படத்தில் பாரம் என்றொரு சுயாதின படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வந்த பின்பு பலரும் சமூக வலைதளத்தில் கேட்ட ஒரு கேள்வி, இந்த படம் எப்போ ரிலீஸ் ஆச்சு என்றுதான். ஆனால், இது ஒரு சுயாதின படம். பல சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டுள்ளது. இந்த வருடம் கோவாவில் திரைப்பட விழாவிலும் தமிழ் சினிமா சார்பில் கலந்துகொண்ட படங்களில் இதுவும் ஒன்று.
இந்த படத்தை பிரியா கிருஷ்ணமூர்த்தி என்பவர் இயக்கியுள்ளார். தற்போது படத்தின் கரு என்ன என்பதை பார்ப்போம். பாரம் என்றால் சுமை என்று ஒரு பொருள் இருக்கிறது. இந்த படத்தின் கதையும் அதை சார்ந்ததுதான். தன்னுடைய மனைவியை இழந்த ஒரு நைட் வாட்ச் மேனின் வாழ்க்கையை மையமாக கொண்ட கதைதான் இது.
வாழ்க்கையின் கடைசி நாட்களில் உள்ள வாட்ச்மேன் கருப்புசாமியை அவரது மகன் எவ்வாறு கவனித்துக் கொள்கிறார் என்பதே இந்த படத்தின் முக்கிய கரு.
கிராமங்களில் வீட்டில் இருக்கும் முதியோர்களை தலைகூத்தல் என்ற முறையை பயன்படுத்தி கருணை கொலை செய்யும் வழக்கம் தமிழகத்தின் ஒருசில கிராமங்களில் இன்றும் இருப்பதாக சொல்லப்படுகிறது. தலைகூத்தல் என்றால் முதியோரின் உச்சந்தலையில் நல்லெண்ணெய்யை வைத்து, அதன்பின் உணவுக்கு பதிலாக அவருக்கு இளநீர் கொடுத்துகொண்டே இருந்தால் அதிகபட்சமாக இரண்டு நாட்களில் அந்த முதியவர் இறந்துவிடுவார். இந்த முறையை பற்றி பேசும் படம்தான் பாரம்.