Skip to main content

"இப்புகழும் பணமும் அம்மா பட்ட அவமானத்திற்கு ஈடாகாது...." ஏ.ஆர்.ரஹ்மானின் அம்மா பாசம்!

Published on 28/12/2020 | Edited on 28/12/2020

 

A. R. Rahman

 

பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், 'ரோஜா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, இந்தி எனப் பிற மொழி படங்களுக்கும் இசையமைத்து வந்த ஏ.ஆர்.ரஹ்மான் மிகக் குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரானார். மேலும், 'ஸ்லம்டாக் மில்லியனர்' படத்தின் இசைக்காக பெரிதும் பேசப்பட்ட ரஹ்மான், அப்படத்திற்காக இரு ஆஸ்கார் விருதுகளையும் வென்றார்.

 

சிறு வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால், தாயார் கரீமா பேகம் அரவணைப்பில் வளர்க்கப்பட்டார். கடுமையான வறுமைச் சூழலை அவர்களது குடும்பம் எதிர்கொண்டாலும், தன் மகனின் இசைக் கலைஞனாக வேண்டும் என்ற லட்சிய பயணத்தில் எவ்விதத் தடங்கலும் ஏற்படாமல் அவரது தாயார் பார்த்துக் கொண்டார். ஏ.ஆர்.ரஹ்மான் தந்தை ஒரு இசைக்கலைஞர் என்பதால் அவரிடம் இருந்த ஏராளமான இசைக்கருவிகளை வாடகைக்கு விட்டு அதிலிருந்து கிடைத்த வருவாய் மூலம் தனது குடும்பத்தினை நடத்தி வந்தார். தன் அம்மா குறித்து பல நேர்காணலில் ஏ.ஆர்.ரஹ்மான் நெகிழ்ச்சியாகப் பேசியுள்ளார். அதில் சிலவற்றை காண்போம்.

 

ஒரு நேர்காணலில் பேசும்போது, "நான் இன்று இந்த இடத்தில் இருக்கிறேன் என்றால் என் அம்மாதான் காரணம். அப்பா இறந்தபின் அவர் செய்த வேலையை நீ செய் என்றார். எனக்கு எலெக்ட்ரானிக் மற்றும் கணினி மீது ஆர்வம் இருந்ததால் அத்துறையில் போகலாம் என்று நினைத்தேன். குடும்பச்சூழலை கருத்தில் கொண்ட என் அம்மா 'உனக்கு இசை தெரியும். அதிலேயே சம்பாதிக்க முடியும்' எனக் கூறினார்.

 

ஏ.ஆர்.ரஹ்மான் தன் தாயார் குறித்து எழுதிய கடிதம் ஒன்றை அவரது தங்கை ஒரு மேடையில் உருக்கமாக வாசித்தார். அக்கடிதம், "தாயின் காலடியில் சொர்க்கம் இருக்கிறது என்பது நபி மொழி. என்னை பொறுத்தவரை இது மிகவும் உண்மையே. ஏனெனில் என் தயார் உறுதியாக இருந்து என்னை இசையில் ஈடுபடுத்தியிருக்காவிடில், இந்த வாழ்க்கையின் எல்லா இன்பங்களையும் அன்பையும் இழந்திருப்பேன். இந்தப் புகழும் பணமும் எங்களை வளர்க்க என் தாய் சிந்திய கண்ணீரையும் பட்ட அவமானங்களையும் ஈடு செய்ய முடியாது. நான் என்னைத் தாழ்வாகவும் வாழ்க்கையை சுமையாகவும் எண்ணிய போது, நீ ஏன் மற்றவர்களுக்காக வாழக் கூடாது, உன் வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருக்குமேயென என் தாய் கூறிய வார்த்தைகள் இன்றும் நினைவில் உள்ளது. அந்த வார்த்தைகள்தான் வாழ்வதற்கும் சிறந்த பணிகளை நான் செய்வதற்கும் தொடர்ந்து உதவியாக இருக்கிறது.

 

என்னுடைய முதல்பாடலான சின்னசின்ன ஆசையின் இசை பதிவிற்கு முதல்நாள் என்னுடைய இசை நண்பர்கள் என்னைக் கைவிட்டபோது என் தாய் என்னுடன் இருந்தார். இசை உன்னிடம் இருக்கிறது. வேறு யாரும் தேவையில்லை என ஆறுதல் கூறிய அவர், பாடல் பதிவு முடிந்தவுடன் அப்பாடலை கேட்டு கண்ணீர் விட்டார். என் பிரார்த்தனை பலித்துவிட்டது, இப்பாடலில் தெய்வீக அருள் உள்ளது என்றார். என் தாயைப் பற்றி எழுத வேண்டுமென்றால் அது பெரிய புத்தகமாகிவிடும்". 

 

 

சார்ந்த செய்திகள்