Skip to main content

அஜித், கார்த்தி வழியை பின்பற்றும் கெளதம் கார்த்திக்!

Published on 16/03/2021 | Edited on 16/03/2021

 

vdb

 

ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் தயாரிக்கும் “ஆனந்தம் விளையாடும் வீடு” திரைப்படத்தின் படப்பிடிப்பு கிருஷ்ணகிரியில் நேற்று (15.03.2021) துவங்கியது. இயக்குநர் நந்தா பெரியசாமி எழுதி இயக்கும் இப்படத்திற்கு 'சிவப்பு மஞ்சள் பச்சை' பட இசையமைப்பாளர் சித்து குமார் இசையமைக்கிறார். நீண்டகாலம் கழித்து தமிழ் சினிமாவில் குடும்பத் திரைப்படமாக உருவாகும் இப்படத்தில் கௌதம் கார்த்திக், சேரன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சரவணன், டேனியல் பாலாஜி, விக்னேஷ், சிங்கம் புலி, ‘கும்கி’ ஜோ மல்லூரி, பாடலாசிரியர் சினேகன், நமோ நாராயணன், சௌந்தராஜன், மௌனிகா, மைனா, ‘பருத்திவீரன்’ புகழ் சுஜாதா, பிரியங்கா, நக்கலைட்ஸ் தனம், வெண்பா உட்பட பலர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

 

cszcs

 

இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று கிருஷ்ணகிரி பொன்மலை திருப்பதியில் மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது. கௌதம் கார்த்திக், ஷிவத்மிகா ராஜசேகர் நடிப்பில் நடன இயக்குநர் தினேஷ் வடிவமைப்பில் அழகான பாடலுடன் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. மேலும் இப்படம் குறித்து தயாரிப்பாளர் பி.ரங்கநாதன் பேசும்போது... “‘ஆனந்தம் விளையாடும் வீடு’ படப்பிடிப்பு தளத்தில் நிலவும் குதூகலமும், கொண்டாட்டமும் மனதிற்கு பெரும் நிறைவை தந்துள்ளது. பல வருடங்களாக திரைத்துறையில் பயணிக்கிறேன். எப்போதுமே அழகான குடும்பக் கதைகள், திரையுலகம் திரும்பி பார்க்கும் வெற்றியை தொடர்ந்து பெற்றிருக்கின்றன. கடும் பசியில் உள்ளவர்களுக்கு அறுசுவை விருந்து படைப்பது போல்தான் குடும்பக் கதைகள். அதில் சமைப்பவனுக்கு சம்பளம் மட்டுமல்லாமல் இதயம் நிறைந்த வாழ்த்துகளும் வந்து சேரும். முன்பே சொன்னதுபோல் அஜித்தின் ‘விஸ்வாசம்’, கார்த்தியின் ‘கடைக்குட்டி சிங்கம்’ போன்ற குடும்ப படங்களுக்கு ரசிகர்களிடம் தனி வரவேற்பு இருந்து வருகிறது. 

 

இப்படியான படங்களை ரசிகர்கள் ஒருமுறை பார்ப்பதோடல்லாமல் அடுத்த முறை நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரை அழைத்து வந்து பார்த்து, ரசித்து கொண்டாடுவார்கள். எங்கள் ஶ்ரீ வாரி ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முக்கிய குறிக்கோளே குடும்பத்தில் உள்ள அனைவரையும் திரையரங்கிற்கு அழைத்து வரும் தரமான படங்களைத் தயாரிப்பதே ஆகும். அந்த வகையில் காதல், காமெடி, ஆக்சன் உணர்வுகள் என அனைத்தும்  நிறைந்த அழகான குடும்பக் கதையினை உருவாக்கியிருக்கும் இயக்குநர் நந்தா பெரியசாமி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்