"நான் ஒரு விஷயத்தை முழுதாக நம்புறேன். நாம் ஒவ்வொருவர் சாப்பிடும் அரிசியிலும் அவரவர் பெயரிருக்கும். நமக்கென எழுதப்பட்டதுதான் நமக்குக் கிடைக்கும். கிடைக்காதது நமக்கானது இல்லை. அதை நினைத்து நான் கவலைப்படமாட்டேன்" - அஜித், தான் முன்பு கொடுத்த பேட்டிகளில் பல முறை கூறியது. முக்கியமாக, இந்த வார்த்தைகள் அவர் மிஸ் பண்ணிய, நிராகரித்த படங்கள் குறித்த கேள்விகளின் போது அஜித் கூறியது. அப்படி எந்தெந்த படங்களை அஜித் மிஸ் பண்ணியுள்ளார், நிராகரித்துள்ளார்? தெரிந்தால் 2K கிட்ஸ் கொஞ்சம் ஆச்சரியப்பட்டுதான் போவார்கள்.
ஒரு செம்ம அஜித் - விஜய் காம்போ மிஸ் ஆயிடுச்சு
'அமராவதி' படம் மூலமாக தமிழுக்கு அறிமுகமானார் அஜித். அந்தப் படம் தோல்விப்படமல்ல என்றாலும் மிகப்பெரிய வெற்றியையும் பெறவில்லை. மிகச்சிறந்த பாடல்களைக் கொண்ட படம் அது. அதன் பிறகு அஜித் நடித்த படங்களான பாசமலர், பவித்ரா போன்றவை வெற்றி பெறவில்லை. விஜயுடன் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' படமும் தோல்வியே. தமிழ் திரைப்பட கேரியரில் அஜித்திற்கு முதல் மறுக்கமுடியாத வெற்றியாக அமைந்தது வசந்த் இயக்கிய 'ஆசை'. 'ஆசை' வெற்றி பெற்றதைத் தொடர்ந்து இயக்குனர் வசந்த் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் ஒன்றை படமாக்க நினைத்தார். அதில், தனது முந்தைய ஹீரோவான அஜித்தையும் அப்போது வளர்ந்து வந்த விஜயையும் நடிக்கவைக்க நினைத்தார். அந்த இருவரும் பின்னாளில் தமிழ் சினிமாவை ஆள்வார்கள் என்று அப்போதே அவருக்கு மனதில் பட்டதோ என்னவோ... 'நேருக்கு நேர்' என்று பெயரிடப்பட்டு படவேலைகள் தொடங்கின. ஆனால், சில நாட்களிலேயே அஜித்திற்கும் இயக்குனர் வசந்த்திற்கும் அந்த நேரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் படத்திலிருந்து விலகினார் அஜித். அந்த பாத்திரத்தில்தான் சூர்யா அறிமுகமானார்.
பின்னாளில் அஜித் மிஸ் பண்ணிய சில படங்களில் சூர்யா நடித்து அவை மிகப்பெரிய வெற்றிகளைப் பெற்றதும் நடந்தது. 'நேருக்கு நேர்' படத்தில் அஜித் நடித்திருந்தால் அது அஜித் - விஜய் இருவரின் ரசிகர்களுக்கும் இன்றுவரை ஒரு விருந்தாக இருந்திருக்கும். அந்தப் படத்தின் கதை அப்படி. அதற்கு முன்பே அஜித், விஜய் இணைந்து நடித்த 'ராஜாவின் பார்வையிலே' மட்டும்தான் இன்றுவரை அவர்கள் இருவரும் இணைந்து நடித்த ஒரே படம். ரஜினி - கமல் ரசிகர்கள் கொண்டாட அவர்கள் இருவரும் இணைந்து நடித்த பல படங்கள் இருக்கின்றன. ஆனால், அஜித் - விஜய் ரசிகர்களுக்கு ஒரே படம், அதுவும் வெற்றியைத் தவறவிட்ட படம்தான் இருக்கிறது. இனி இவர்கள் சேர்ந்து நடிப்பது என்பது கிட்டத்தட்ட சாத்தியமில்லாத ஒரு விஷயம். அந்த வகையில் 'நேருக்கு நேர்' படத்தில் அஜித் நடிக்காமல் போனது அஜித் ரசிகர்களுக்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கும் ஒரு இழப்புதான்.
'ஜெமினி'க்கு நோ... 'ரெட்'க்கு யெஸ்...
'காதல் மன்னன்', 'அமர்க்களம்' இரண்டும் அஜித்தை ஒரு நடிகன் என்பதைத் தாண்டி ஒரு நாயகனாக செதுக்கிய, உருவாக்கிய முக்கியமான திரைப்படங்கள். அந்தப் படங்களை இயக்கிய சரண் மீண்டும் அஜித்திற்காக ஒரு கதையை தயார் செய்தார். அஜித்தின் 25ஆவது படமான அமர்க்களம் வெற்றியைத் தொடர்ந்து இந்தக் கூட்டணி இணைய இருந்த அந்தக் கதையை அஜித்திற்காகவே செதுக்கினார் சரண். அஜித்தின் மாஸை அடுத்த லெவலுக்குக் கொண்டு செல்லும் விதமாக உருவாகியிருந்தது அந்தக் கதை. இன்னொரு புறம் அஜித்தும் அமர்க்களம், தீனா, சிட்டிசன் என ஒரு மாஸ் ஆக்ஷன் ஹீரோவாக உருவாகியிருந்தார். அப்போது அஜித்தின் முன் இரண்டு கதைகள் இருந்தன. ஒன்று, நடிகர் சிங்கம்புலி (அப்போது ராம்சத்யா என்ற பெயரில்) சொன்ன 'ரெட்' படத்தின் கதை. இன்னொன்று சரண் உருவாக்கிய 'ஜெமினி' கதை. 'ஜெமினி' கதையைவிட 'ரெட்' கதை நன்றாக இருப்பதாக எண்ணிய அஜித் 'ஜெமினி'யை மறுத்து 'ரெட்' படத்தில் நடித்தார்.
உண்மையில் கதையாக கேட்கும்பொழுது 'ரெட்' படத்தின் கதை சிறப்பானதாகத் தோன்றுவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அதேநேரம் 'ஜெமினி' ஒரு வழக்கமான ரௌடி ஹீரோ கதையாகத் தோன்றும். ஆனால் இந்த இரண்டு படங்களும் வெளிவந்தபோது ரிசல்ட் தலைகீழாக இருந்தது. 'ரெட்' தோல்வியடைந்தது. 'ஜெமினி' வெளிவந்த 2002ஆம் ஆண்டின் மெகா ஹிட் படமானது. 'ஜெமினி' படத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் தெரியும் அந்த 'ஜெமினி' பாத்திரம் அஜித்திற்கு எவ்வளவு பொருத்தமாக வடிவமைக்கப்பட்டிருக்கும் என்பது. 'ஜெமினி'யில் பிரிந்த இந்தக் கூட்டணி ஒரு இடைவெளிக்குப் பின்னர் 'அட்டகாசம்', 'அசல்' என இரண்டு படங்களில் மீண்டும் தொடர்ந்தது.
இதில் நடிக்காமல் இருந்ததே நல்லது...?
இந்தப் படத்தின் கதை அஜித்திற்காக உருவாக்கப்பட்டது என்றால் நம்புவது கொஞ்சம் சிரமம்தான். ஆனால், நடந்தது அதுதான். ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரெல்லாம் கூட வெளிவந்தது. பின்னர் அஜித் நடிக்காமல் போக, படத்தின் டீம் மாறி, ஒரு புதிய ஹீரோ தமிழுலகுக்கு வந்தார். ஆம், இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா ஹீரோவான 'நியூ' படம் முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. அஜித், படத்தின் வெற்றி தோல்வியைத் தாண்டி ஒரு இயக்குனருடன் கம்ஃபர்டபுளாக உணர்ந்தால் மட்டுமே மீண்டும் இணைந்து பணியாற்றுவார். தனக்குப் பிடித்திருந்தால் மீண்டும் மீண்டும் சேர்ந்து படங்கள் உருவாக்குவதை விரும்புவார். அப்படித்தான் எஸ்.ஜே.சூர்யாவுடன் மீண்டும் இணைந்தார்.
ஜோதிகா, பி.சி.ஸ்ரீராம், தேவா என முதலில் அறிவிக்கப்பட்ட டீமே வேறு. ஆனால், சில காரணங்களால் தாமதமாகிய படம், பின்னர் கைவிடப்பட்டு மொத்த டீமும் எஸ்.ஜே.சூர்யா - சிம்ரன் - ஏ.ஆர்.ரஹ்மான் - கே.வி.குகன் என மாறி வெளியாகி வெற்றியையும் பெற்றது. ஆனால், அந்தப் படத்தைப் பார்த்த அஜித் ரசிகர்கள், 'இதில் அஜித் நடிக்காமல் இருந்ததே நல்லது' என்று நினைத்தது உண்மை. அதீத இரட்டை அர்த்த வசனங்கள், கவர்ச்சி, அதனால் உருவான சர்ச்சைகள் என அந்தப் படம் அஜித்திற்கு ஏற்றதாக இல்லை. அதன் பிறகு இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா அஜித்துடன் இணையும் வாய்ப்பு அமையவேயில்லை. இன்று வரை எந்த ஒரு பேட்டியிலும் அஜித்தை மிகுந்த அன்புடனும் நன்றியுடனும் நினைவு கூறுபவர் எஸ்.ஜே.சூர்யா.
இதுதான் மெகா மிஸ்!
இன்று பாலிவுட் வரை அறியப்பட்ட இயக்குனராக இருக்கும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய முதல் படம் 'தீனா'. மிக இளம் வயதில் இருந்த முருகதாஸுக்கு அஜித் கொடுத்த வாய்ப்பு என்றே அப்போது சொல்லப்பட்டது. எஸ்.ஜே.சூர்யாவின் அறிமுகம் மூலமாக அமைந்தது 'தீனா'. அஜித்திற்கு 'தல' என்ற பெயரை அளித்த படம் அது. 'தல' என்ற வார்த்தை தமிழகம் முழுவதும் பிரபலமானது. இன்று கிரிக்கெட் ரசிகர்கள் தோனிக்காக அந்த வார்த்தையை திருடிக்கொண்டனர். இரண்டாவது படமாக 'ரமணா'வை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற முருகதாஸ் மீண்டும் அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க முடிவு செய்து 'மிரட்டல்' என்ற கதையை உருவாக்கினார். படத்திற்கான போஸ்டர்களெல்லாம் வெளிவந்தன. வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டிருந்த போஸ்டர்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தன.
பெரும் எதிர்பார்ப்புடன் தொடங்கிய அந்தப் படம் சில நாட்களில் ட்ராப் ஆனது. படத்தின் கதை குறித்தும் உருவாக்கம் குறித்தும் அஜித்திற்கும் முருகதாஸுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடுதான் அதற்குக் காரணம். பின்னர் 'கஜினி' என்ற பெயரில் சூர்யா நடித்து உருவான அந்தப் படம் பெற்ற வெற்றி மிக மிகப் பெரியது. முருகதாஸை பாலிவுட்டில் வெற்றிகரமாகக் லான்ச் செய்ததும் கஜினிதான். அஜித்தின் மூலம் அறிமுகமான முருகதாஸ் இன்று விஜய்யின் ஆஸ்தான இயக்குனராகிவிட்டார். பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலனின் கவனத்திற்கும் அந்தப் படம் சென்றது. ஆனால், அது வேறு காரணத்திற்காக. 'கஜினி'யில் கோட் சூட் அணிந்து பிரைவேட் ஜெட்டில் வந்து அஜித் இறங்கியிருந்தால் எப்படி இருந்திருக்கும்?
நான் கடவுள்... யார் சாத்தான்
குண்டாகிக்கொண்டே போகிறார் என்று 'பூவெல்லாம் உன் வாசம்', 'ராஜா' காலகட்டத்தில் கமெண்ட் அடிக்கப்பட்ட அஜித் திடீரென சில மாதங்கள் வெளியுலகின் கண்களில் படாமல் இருந்து பின்னர் மெலிந்த உடல், நீண்ட தலைமுடி என புதிய தோற்றத்தில் அனைவருக்கும் 'ஷாக்' கொடுத்தார். பாலா இயக்கத்தில் 'நான் கடவுள்' படத்தில் நடிப்பதற்காகத்தான் அந்த தோற்ற மாற்றம். அஜித்தின் கடும் உழைப்பு அந்தத் தோற்றத்தில் தெரிந்தது. ஆனால், படம் தாமதமாகிக்கொண்டே போனது. பாலா, தன் மனம் போகும் போக்கில்தான் போவார். ஆனால், அஜித் அதற்கேற்றவர் அல்ல. இடையில் 'பரமசிவன்', 'திருப்பதி' என மெலிந்த உடலுடன் இரண்டு படங்கள் நடித்து முடித்தும் 'நான் கடவுள்' கண் திறக்கவில்லை. அதிருப்தியடைந்த அஜித், படத்திலிருந்து வெளியேறினார். அதைத் தொடர்ந்து இருவருக்கும் சில பிரச்சனைகள், சர்ச்சைகள். அதன் பிறகு அஜித் நடித்த 'ஆழ்வார்' படத்தில் 'நான் கடவுள்' என வசனம் இருந்தது. பாலாவின் 'நான் கடவுள்' படத்தில் ஆர்யா மிகுந்த சிரமப்பட்டு நடித்தார். படம் வெற்றி பெற்றதோ இல்லையோ, ஆர்யாவுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது.
பரமசிவன்
இவைதான் அஜித் நடிப்பதாக இருந்து பல்வேறு காரணங்களால் விலகிய பெரிய படங்கள். இவை போக 'ஜீன்ஸ்', 'நந்தா', 'காக்க காக்க' உள்ளிட்ட பல படங்களுக்காகவும் முதலில் அஜித் அணுகப்பட்டார் என்று சொல்லப்படுவது உண்டு. பல சுமாரான கதைகள் அஜித் நடிப்பில் பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன, அஜித் ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள். மேலே சொல்லப்பட்ட படங்களும் சேர்ந்திருந்தால் அஜித்தின் ஃபில்மோக்ராஃபி (filmography) எப்படி இருந்திருக்கும்? ஆனால், அஜித் அப்படி நினைப்பவரல்ல. கட்டுரையின் தொடக்கத்தில் சொல்லப்பட்ட வார்த்தைகள்தான். 'அவரவர் அரிசியில் அவரவர் பெயரிருக்கும்' என்பதுதான் அஜித்தின் பதில், நம்பிக்கை.