பாபி சிம்ஹா, ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், இன்னும் பலரது நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் 'அக்னிதேவ்'. ஒரு பெரிய இடைவெளிக்குப் பிறகு இந்தப் படத்தில் 'ரோஜா' புகழ் மதுபாலா ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். ஜெபிஆர், ஷாம் சூர்யா இருவரும் இணைந்து இயக்கியுள்ள இந்தப் படம் பிரபல நாவல் எழுத்தாளர் இராஜேஷ்குமாரின் நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. படத்தின் வசனங்களை பிரபல திரைப்பட விமர்சகரும், திரைக்கதை ஆலோசகருமான 'கருந்தேள்' ராஜேஷ் எழுதியுள்ளார். சமீபத்தில் வெளியான இந்தப் படத்தின் ட்ரைலர் யூ-ட்யூப் ட்ரெண்டில் தொடர்ந்து முன்னிலையில் இருக்கிறது. பெரிய நட்சத்திரங்கள் யாருமில்லாத இந்தப் படத்தின் ட்ரைலர் இந்த வரவேற்பைப் பெற முக்கிய காரணம் என்ன தெரியுமா? மதுபாலா நடித்துள்ள பாத்திரமும், அந்தப் பாத்திரம் பேசும் வசனங்களும்தான்.
‘சகுந்தலா தேவி’ என பெயரிடப்பட்டுள்ள அந்தப் பாத்திரம் ஒரு கர்வமும் ஆணவமும் கொண்ட பெண் அரசியல்வாதியாக உருவாக்கப்பட்டுள்ளது. 'உன்னை மாதிரி ஆம்பளைங்க எத்தனை பேரை காலுக்குக் கீழ போட்டு நசுக்கி இந்த இடத்துக்கு வந்துருக்கேன் தெரியுமா' என்று கடுமையான குரலில் பேசுகிறார் மதுபாலா. 'சின்ன சின்ன ஆசை, சிறகடிக்கும் ஆசை' என்று ஆடிய மதுபாலாவா இது என்னும் அளவுக்கு டெரராக இருக்கிறார் மதுபாலா. 'அரசியல்ல கனவுல வர்ற எதிரியைக் கூட நெஜத்துல இல்லாம பண்ணிடுவேன்' என்று வேறு மிரட்டுகிறார்.
இதற்கெல்லாம் மேலாக, 'என் வீல் சேர் டயரை நக்கிட்டு கெடக்குறதா இருந்தா கெடங்க' என்று ஒரு வசனம் இருக்கிறது. 'டயரை நக்கி' என்ற வார்த்தைகள் இணையத்தில் பிரபலம். 'குனிஞ்சு குனிஞ்சு கும்பிடு போட்டா அப்படியே நம்பிடுவேன்னு நெனச்சியா?' என்ற வசனம் அதிமுகவில் ஜெயலலிதாவுக்குக் குனிந்து கும்பிடு போட்ட கட்சிக்காரர்களை குறிப்பிடுவதாக இணையத்தில் கமெண்டுகள் குவிந்துள்ளன. அந்தக் காட்சியில் மதுபாலாவின் பின்னணியில் ஜெயலலிதாவின் இளமைக் கால ஃபோட்டோ இருப்பது இன்னும் அதிக ஆர்வத்தையும் சந்தேகத்தையும் உண்டாக்குவதாக இருக்கிறது. அந்த ஜெயலலிதா புகைப்படம் அவர் அரசியலுக்கு வந்த புதிதில் எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே 'சர்கார்' திரைப்படத்தில் 'கோமளவள்ளி' என்ற பெயர் ஜெயலலிதாவை குறிப்பதாக இருப்பதாகவும் வேறு சில காட்சிகள் அதிமுகவினரையும் அரசையும் இழிவுபடுத்துவதாகவும் கூறி, கடும் எதிர்ப்பைக் காட்டி திரையரங்குகள் முன் இருந்த விஜய் பேனர்களை சூறையாடினர் அதிமுகவினர். பின்னர், சில காட்சிகள் நீக்கப்பட்ட பின்பே எதிர்ப்புகள் அடங்கின. இப்போது, 'அக்னிதேவ்' படத்தில் இடம் பெற்றிருக்கும் காட்சிகள் எப்படி புரிந்துகொள்ளப்படும், என்ன விளைவுகள் வரும் என்று ட்ரைலரைப் பார்த்த ரசிகர்கள் கேள்வியுடன் இருக்கிறார்கள். திரைப்படங்களை, கற்பனை படைப்புகளாகப் பார்த்து விட்டுவிடாமல் அதில் வரும் காட் படக்குழுவினர் இதைப் பற்றி கவலைப்படாமல் ட்ரைலர் ட்ரெண்டான மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.