Mangadu Muthumariamman Temple Festival Nearby villagers came on horseback

தமிழகத்தில் ஒவ்வொரு கோயில் திருவிழாக்களிலும் ஏதாவது ஒரு வித்தியாசமான நிகழ்வுகள் நடத்தப்படுகிறது வழக்கம். அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவில் பக்கத்து கிராமமான கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு குடியிருப்பு பகுதி மக்களுக்கு மாங்காடு கிராம மக்கள் அழைப்பு கொடுத்து தங்கள் கிராமத்திற்கு அழைத்து விருந்து கொடுப்பதுடன் தேருக்கு வடம் தொட்டுக் கொடுக்கவும் அழைப்பது காலங்காலமான வழக்கம்.

கடந்த சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை (08.06.2025) மாங்காடு முத்துமாரியம்மன் கோயில் சந்தனக்காப்பு, காப்புக் கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடந்து வருகிறது. இந்த திருவிழா மற்றும் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் மாங்காடு கிராம மக்கள் கொத்தமங்கலத்தில் ஒரு குடியிருப்பு பகுதி மக்களுக்கு அழைப்புக் கொடுக்கச் செல்லும் போது அங்கு மாங்காடு கிராமத்தினருக்கு விருந்து உபசரிப்பு செய்து அனுப்பி வைத்தனர். அதே போல, மாங்காடு கிராம மக்களின் அழைப்பை ஏற்று கடந்த சனிக்கிழமை (07.06.2025) மாங்காடு கிராமத்தில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கொத்தமங்கலம் கிராம மக்கள் திங்கள்கிழமை (09.06.2025) நடந்த தேரோட்டத்திற்கு வடம் தொட்டு கொடுப்பதற்காக தாரை தப்பட்டைகளுடன் குதிரையில் ஏறி மாங்காடு கிராமத்திற்கு வந்தனர்.

Advertisment

Mangadu Muthumariamman Temple Festival Nearby villagers came on horseback

இந்த கிராமத்தின் மையப்பகுதியில் குதிரையுடன் காத்திருந்த கொத்தமங்கலம் பகுதி மக்களை மாங்காடு கிராமம் சார்பாக மாலை அணிவித்து மரியாதை செய்து தேருக்கு வடம் தொட அழைத்துச் சென்றனர். மாலையில் நடந்த தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காத்திருக்க குதிரையில் வந்தவர் வடம் தொட்டுக் கொடுக்க திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் உற்சாக முழக்கங்களுடன் வடம் பிடித்து இழுத்துச் சென்றனர். தேரோடும் வீதியில் வண்ண வண்ண வான வேடிக்கைகள் பல மணி நேரம் நடந்தது. இது மக்களின் கவனத்தை ஈர்த்தது. இந்த தேரோட்ட திருவிழாவில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதனும் கலந்து கொண்டார். ஒரு கிராமத்தின் தேரோட்டத்திற்கு மற்றொரு கிராம மக்கள் குதிரையில் வந்து வடம் தொட்டு கொடுத்த சம்பவத்தை அங்கிருந்தவர்கள் நெகிழ்ச்சியாக பார்த்தனர்.