இன்று (16 ஜனவரி 2021) நடிகர் விஜய் சேதுபதியின் பிறந்தநாள். நடிகர்களும் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வில்லன் பாத்திரத்தில் அவர் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகி, அதில் விஜய் சேதுபதியின் நடிப்பு பாராட்டப்பட்டு வருகிறது. இப்படி விஜய் சேதுபதியின் இந்த பிறந்த நாள் சிறப்பாக அமைந்துள்ள நிலையில், ஒரு சர்ச்சையும் உருவாகியுள்ளது. தனது பிறந்தநாளை முன்னிட்டு, சில நாட்களுக்கு முன்பு தான் நடித்து வரும் ஒரு படத்தின் குழுவினருடன் இணைந்து கேக் வெட்டி கொண்டாடியிருந்தார் விஜய் சேதுபதி. இயக்குனர் பொன்ராம் உள்ளிட்ட படக்குழுவினர் அருகில் இருந்தனர். விஜய் சேதுபதி, ஒரு பட்டாக்கத்தியால் கேக் வெட்டுவதுபோல அந்தப் புகைப்படம் அமைந்திருந்தது. அந்தப் புகைப்படம்தான் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே ரவுடிகளும் சில இளைஞர்களும் தங்களது பிறந்தநாளை பட்டாக்கத்தியால் கேக் வெட்டிக் கொண்டாடி, அவர்களை காவல்துறை கைது செய்த சம்பவங்கள் நடந்தன. இப்படியிருக்கும்போது விஜய் சேதுபதி போன்ற ஒரு பிரபலமான நடிகர் இப்படி கேக் வெட்டி புகைப்படம் வெளியிட்டிருப்பது தவறான முன்னுதாரணமாக அமையும் என்பதே சர்ச்சைக்கும் விமர்சனங்களுக்கும் காரணம். இதற்கு நடிகர் விஜய் சேதுபதி விளக்கம் அளித்துள்ளார். அவரது விளக்கம்...
வணக்கம்,
எனது பிறந்த நாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்துள்ள திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவருக்கும் நன்றி. இதனை முன்னிட்டு 3 நாட்களுக்கு முன்பு எனது அலுவலகத்தில், பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் விவாதத்துக்கு உள்ளாகி இருக்கிறது. அதில் பிறந்த நாள் கேக்கினை பட்டாக் கத்தியால் வெட்டியிருப்பேன். தற்போது பொன் ராம் சார் இயக்கத்தில் உருவாகவுள்ள படத்தில் நடிக்கவுள்ளேன். அந்தப் படத்தின் கதைப்படி ஒரு பட்டாக் கத்தி முக்கிய கதாபாத்திரமாக இருக்கும். ஆகையால், அந்தப் படக்குழுவினருடன் பிறந்த நாள் கொண்டாடும்போது அதே பட்டாக் கத்தியை வைத்து கேக்கினை வெட்டினேன். இது ஒரு தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்து விவாதமாகி உள்ளது. இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன். இந்தச் சம்பவம் யாருடைய மனதையாவது புண்படுத்தி இருந்தால் வருத்தம் தெரிவிக்கிறேன்.
நன்றி
விஜய் சேதுபதி