சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகர் சித்தார்த் சமூக பிரச்சனைகள் குறித்து கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவது வழக்கம். அத்துடன் அவ்வப்போது சில சர்ச்சையான கருத்துக்களையும் பதிவிட்டு சர்ச்சையில் சிக்கிக் கொள்வார். அந்த வகையில் சமீபத்தில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் மற்றும் பெண் ஊடகவியலாளர் குறித்து ட்விட்டரில் அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக சர்ச்சையில் சிக்கிக்கொண்டார். அதனையடுத்து சித்தார்த்தின் கருத்துக்கு எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் அவரிடம் விசாரணை நடத்துமாறு தேசிய மகளிர் ஆணையம் தமிழக காவல் துறைக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் நடிகர் சித்தார்த்துக்கு சென்னை மாநகர போலீஸ் சம்மன் அனுப்பியது. இந்த விவகாரம் தொடர்பாக வீடியோ கான்பரன்ஸ் மூலம் வாக்குமூலம் அளித்த நடிகர் சித்தார்த், பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததற்கும், பெண் ஊடகவியலாளர் குறித்து அவதூறாக பேசியதற்கும் விசாரணையில் மன்னிப்புக் கேட்பதாக தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். மேலும் எனது மன்னிப்பை சம்பந்தப்பட்டவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் விளக்கம் அளித்துள்ளார். இதனையடுத்து நடிகர் சித்தார்த்தின் வாக்குமூலத்தை தேசிய மகளிர் ஆணையத்திற்கு சென்னை மாநகர போலீசார் அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையே நடிகர் சித்தார்த் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலிடம் ட்விட்டர் மூலம் மன்னிப்பு கேட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.