தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் ரஜினி, சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார். இதையடுத்து 'அடுத்த சூப்பர் ஸ்டார்' என்ற பட்டத்துக்கு அடுத்த தலைமுறை நடிகர்களான விஜய் மற்றும் அஜித் பெயர்கள் அடிபட்டன. ஆனால் சமீப காலமாக விஜய்யின் பெயர் அதிகளவில் அடிபட்டு வருவதால் சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக இருந்து வருகிறது.
மேலும் கடந்த 28 ஆம் தேதி ரஜினி நடித்த ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்ற நிலையில் அதில் பேசிய ரஜினி, "சூப்பர் ஸ்டார் பட்டம் என்றைக்குமே தொல்லை தான். ரொம்ப காலம் முன்பு சூப்பர் ஸ்டார் பட்டத்தை நீக்க சொன்னேன். அப்போது சிலர் ரஜினி பயந்துவிட்டதாக கூறினார்கள். நான் இரண்டு பேருக்கு மட்டுமே பயப்படுகிறேன். ஒருவர் கடவுள், மற்றொருவர் நல்ல மனிதர்கள். நல்லவங்களோட சாபம் எப்பவும் நம்மை காயப்படுத்தும். நல்லவர்களை நாம் புண்படுத்தக் கூடாது. நல்லவர்களுக்கு பயப்பட வேண்டும்" என்றிருந்தார்.
இந்நிலையில் ஒரு நிகழ்ச்சியில் செய்தியாளர்களைச் சந்தித்த பிரபு, அவர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அப்போது சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த கேள்விக்கு, "எங்க அண்ணன் ரஜினி, சூப்பர் ஸ்டார். மற்றவர்கள் எல்லாம் சூப்பர் நடிகர்கள். ரஜினி சார் என்ன சொல்லியிருக்கிறார்... நான் அதே இடத்தில் இருக்க முடியாது. யாராவது வரவேண்டும் என்று தானே சொல்கிறார். ரஜினி சார் வழிவிடுகிறார்.
ரஜினி சார் சூப்பர் ஸ்டார்... சூப்பர் ஸ்டார் தான். மற்ற நடிகர்கள் எல்லாம் சூப்பர் நடிகராக இருந்து சூப்பர் ஸ்டாராக வரட்டும். வந்தால் சந்தோசம் தான். தேவர் மகன் படத்தில் அந்த சீட் போனதுக்கு அப்புறம் சின்ன தேவர் வந்து உட்காருவார். விஜய்யும் இருக்காரு, அஜித்தும் இருக்காரு. அவுங்கவுங்க லெவலுக்கு எங்க நிற்க முடியுமோ அங்கே இருக்கட்டும்" எனப் பதிலளித்தார்.