நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் வாக்கு பதிவு, மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் நிலையில், ஒவ்வொரு கட்டங்களாக நடந்து வருகிறது. இதுவரை நான்கு கட்ட வாக்குபதிவுகள் நடைபெற்று முடிந்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி அன்று தமிழ்நாடு, மணிப்பூர், உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26ஆம் தேதி கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளுக்கும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு மே 7ஆம் தேதி குஜராத், மராட்டிம், கோவா உள்ளிட்ட 94 தொகுதிகளுக்கும் நான்காம் கட்ட வாக்குபதிவு மே13ஆம் தேதி தெலுங்கானா, ஆந்திரா உள்ளிட்ட 96 தொகுதிகளுக்கும் நடைபெற்றது.
இதையடுத்து இன்று ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அதன்படி உத்தரப் பிரதேசத்தில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகளுக்கும், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகளுக்கும், பீகாரில் 5 தொகுதிகளுக்கும், ஒடிசாவில் 5 தொகுதிகளுக்கும், ஜார்க்கண்டில் 3 தொகுதிகளுக்கும், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும், லடாக் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதிகளுக்கும் என 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் காலை முதல் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்து வருகின்றனர். திரை பிரபலங்கள் அக்ஷய் குமார், அமீர் கான், ஹேமா மாலினி, சுனில் ஷெட்டி, வருண் தவான், ஃபர்ஹான் அக்தர், சோயா அக்தர், பரேஷ் ராவல், சுதர்மேந்திரா எனப் பலரும் வாக்களித்தனர். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டின் முன்னணி நடிகர்களான அமிதாப் பச்சன், சல்மான் கான், சாருக்கான், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். மேலும் நடிகைகள் தமன்னா, சோனாக்ஷி சின்ஹா, சாரா அலிகான் ஆகியோரும் தங்களது வாக்கினை செலுத்தினர்.