16-வது ஆசிய திரைப்பட விருதுகள் வருகிற மார்ச் மாதம் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்த விருது விழாக்குழு போட்டிப் பிரிவில் பரிந்துரை செய்யப்பட்ட படங்கள் மற்றும் கலைஞர்களின் விவரங்கள் குறித்து அறிவித்துள்ளது. இந்த விழாவில் 22 நாடுகளில் இருந்து 30 படங்கள் 81 பரிந்துரைகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அந்த வகையில் தென்னிந்திய மொழிகளைச் சார்ந்த பொன்னியின் செல்வன் முதல் பாகம், ஆர்.ஆர்.ஆர் உள்ளிட்ட படங்கள் பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த படம், சிறந்த எடிட்டிங், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த இசை, சிறந்த உடை அலங்காரம், சிறந்த கலை இயக்குநர் உள்ளிட்ட 6 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. மேலும், ஆர்ஆர்ஆர் சிறந்த விஷுவல் எஃபெக்ட்ஸ், சிறந்த ஒலி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
மணிரத்னம் இயக்கத்தில் ஜெயம் ரவி, விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான பொன்னியின் செல்வன் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், வசூலிலும் ரூ. 500 கோடிக்கு மேல் ஈட்டி சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கு ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
ராஜமௌலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஆர்ஆர்ஆர் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. மேலும், 95-வது ஆஸ்கர் விருது பட்டியலில் தனிப்பட்ட முறையில் அனுப்பப்பட்டு சிறந்த பாடல் பிரிவில் 'நாட்டு நாட்டு' பாடல் நாமினேஷனுக்கான முந்தைய இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.