Skip to main content

"இறப்பின் இதம் கூட சுகம்தான் இதயத்தைக் கூறுபோடும் இரக்கமற்ற நிகழ்வுகளைக் காட்டிலும்.." - லதா சரவணன் எழுதும் இப்படியும் இவர்கள் #27

Published on 08/04/2020 | Edited on 08/04/2020

அதிகாலையைத் தாண்டிய ஒரு குறைவான நேரம் என்னைக் கடந்து செல்லும் அந்த விநாடிகளின் தாக்கத்தில் நான்! உறக்கம் கண்களைத் தேடிப் பிடிக்கத் தனிமை காட்டிற்குள் புலி துரத்திய மானாய் மாறிப் போனேன்.போர்க்கப்பலைச் சுமந்து வரும் விரும்பத்தகாத அலைகளைப் போல,ஆளில்லாத தீவுகளில் பாய்மரப் படகினில் கடக்கிறேன்.யார் நான்... என் வீட்டுச் சுவரின் வெளிவாயிலை "ஆஞ்சநேயரின் படத்தோடு தனிமைப்பட்டிருக்கிறேன்" என்ற அரசாங்க சுவரொட்டியும் அலங்கரித்தது. இப்போது புரிந்திருக்கும் என் தனிமைக்குண்டான காரணம் தங்களுக்கு! முகக் கவசத்திற்குள் ஒளிந்து கொண்டிருக்கும் என் மூச்சுக் காற்றினால் என்னை ஒளித்துக் கொள்ள முடியவில்லை எத்தனை முயன்றும்.அந்த வீட்டின் ஒற்றைத் தனிமையில் நான் ஒளிந்து கொண்டு இருக்கிறேன்.யாருக்காக கண்ணுக்குத் தெரியாத குட்டி எதிராளியால்.நான் போராளியாக மாற முயற்சித்து முடியாமல் போரின் முடிவில் தோல்வியுற்ற அரசனைப் போல கைகால்கள் பிணைக்கப்படவில்லை ஆனாலும் நான் தோல்வியுற்று கைதாகிப்போனேன்.

 

gh



முட்கள் அடங்கிய ஒரு முள்ளம் பன்றியின் குறுகியத் தோற்றம் அதனுள்.நான் முன்பொரு முறை தீவுத்திடலில் பிள்ளைகளுக்கு வாங்கிக் கொடுத்த ரப்பர் பொம்மையை நினைவூட்டியது அந்த வைரஸின் உருவம்.தற்கொலை செய்து கொண்டு இறந்து போன கொடூரமான ஆவியின் ரத்தவாடையை நான் அதில் உணர்ந்தேன்.அந்த உருவம் மறைந்திருந்தது ஆனாலும் ரத்தம் குடிக்க காத்திருக்கும் இதழ்களையும் நீண்டு வளைந்த பற்களையும் என்னால் உணர முடிந்தது.இரண்டொரு நாட்களுக்கு முன்னால் நானும் ரசித்தேன் சிலரின் வாட்ஸ் அப் குறும்பை என்றோ நடந்த விஷயங்களைக் கூடத் தற்போது தொடர்பு படுத்தி உலாவந்த ஹாஷ்யத்தை ரசிக்கும் மனநிலையில் நானிருக்கிறேனா என்பதைப் பாதிச் சூட்டில் என் உதடு சுவைத்துக் கொண்டிருக்கும் தேநீரைக் கேட்டுத்தான் சொல்ல வேண்டும்.அந்த இஞ்சி கலந்த தேயிலையின் கொதிநிலையின் ஓசை கூட சொல்லவொண்ணா அச்சத்தைக் கொடுத்தது. சில நாட்களுக்கு முன்னால்....... !

நான்கைந்து வருடங்களைக் கடந்து மீண்டும் சொந்த ஊர்ப் பயணம். வரவேற்க ஆளில்லாமல் என் முதல் தனிமைச் சுமையைச் சுமந்தபடியே சோதனைச் சாலைக்குள் அகப்பட்ட எலியின் நிலையில் நான்.கையடக்க சிறு கருவி என் உடல் உஷ்ணத்தைச் சோதித்தது. சிறுபிள்ளையாய் இருந்த போது தன் உதட்டைக் கொண்டு நெற்றியில் ஒற்றி உடல் உஷ்ணத்தைச் சோதித்த அன்னையின் அக்கறை அதில் இல்லை.அன்று கொப்பளித்த உஷ்ணம் அரிசியில் பாதி உடைத்த சோற்றுக் கஞ்சிக்கும், ஜிகினா அட்டை உரித்த வெள்ளை மாத்திரைப் பட்டைக்கும் கட்டுப்பட்டது. இருமிக்காட்டினேன் ஒன்றும் தொற்று இல்லை என்று விடுவிக்கப்பட்டேன்.நான் வசித்த காலணியில் என்னை விசித்திர ஜந்துவைப் போல் பார்த்தார்கள் "ஊர்லே இருந்து இப்போ வராட்டா என்ன?". வெறிச்சோடிய சாலைகள் நிழலுக்கு ஆங்காங்கே ஓதுங்கி இருந்த கால்நடைகளைப் பார்க்கும் போது கண்ணுக்கும் மனதிற்கும் இதமாய் இருந்தது.சாக்லேட் கொடுத்து சுதந்திரம் கொண்டாடிய பிறகு அரைக்கம்பத்தில் பறக்கவிடும் கொடியைப் போல அரைப்பக்கம் கதவைத் திறந்து வைத்துக் கொண்டு ஜரூராய் வியாபாரம் பார்த்தார்கள்.மளிகைக் கடை அண்ணாச்சிகள் ஆன்லைன் வர்த்தகங்கள் எல்லாம் தன் சாயம் இழந்த நேரத்தில் தெருமுனை காய்கறிக் கடைகளும் அண்ணாச்சிகளும் தான் உயிரைப் பணயம் வைத்து பணி புரிந்தார்கள்.

 

http://onelink.to/nknapp


சாலையின் ஓரம் கூலிக்குக் காத்திருக்கும் அந்தச் சித்தாள்களின் குழுக்கள் கனத்த மெளனத்தைப் போர்த்திக் கொண்டு உறங்கும் காரிருளை அணைத்த வானம் போல அங்கொன்றும் இங்கொன்றுமாய் மனிதர்கள்.முகம் மறைத்த விழிகளும், வெள்ளை உறைகள் போட்ட கைகளும் கொண்ட மக்களைக் காண முடிந்தது தெரு முனையின் மெட்பிளஸ்ஸிலும், இறைச்சி கடைகளிலும், மட்டும் இடைவெளி விட்டு பாண்டியாட்டத்தைப் போல கோடுகளுக்குள் தங்களை முடக்கிக் கொண்டு இருந்தார்கள் மக்கள்.ஊரடங்கு சாலைக்குத்தான் யாருடைய நாவிற்கும் இல்லை போலும், கீழே கிடந்த கழிகளைத் தன் அலகால் ருசித்து அலைந்த கோழிகளுக்கு இன்னும் சிறிது நேரத்தில் தோலுரித்த பண்டமாய் ஒட்டைகள் அடங்கிய கூடைக்குள் சுவாசம் தொலைத்து செல்லப் போவது தெரிந்திருக்க நியாயமில்லை.என் வீட்டின் வாசலில் சற்று முன்பு தெளித்த மஞ்சள் நீரின் கோலப்புள்ளிகள் எஞ்சியிருந்தது. வேப்பிலைகள் புது மணப்பெண்ணின் பொலிவுடன் வீட்டின் முன் கதவுகளில் புன்னகைத்து கொண்டு இருந்தது.
 

h



காலிங்பெல்லை அழுத்தியவுடன் திறந்த என் மனையாளின் முகத்தில் நான்கு ஆண்டுகள் கழித்து எனைப் பார்க்கும் மகிழ்வைக் காட்டிலும் பய உணர்வை நான் உணர்ந்தேன்.உள்ளே அனுமதிக்கப்பட்டேன்.என்னப்பா வாங்கிட்டு வந்தே என்று ஆசையோடு காலைக் கட்டிக் கொள்ளும் குழந்தைகள் கதவிடுக்கில் சிக்கிய ஏதோபோல் தலையை மட்டும் நீட்டிப் பார்த்தன. ஒரு சுற்றுப் பெருத்து இருந்தாலும் என்னடா இப்படி துரும்பா இளைச்சிப் போயிட்டே என்று கேட்ட அம்மா எத்தனை நேரம் இங்கேயே நிப்போ போடா போய்க் குளி என்று விரட்டினார். நான் விரும்பியணிந்த வெள்ளைச் சட்டை மஞ்சளைப் பூசிக் கொண்டு பல்லிளித்து.குளித்து விட்டு சோபாவில் அமர்ந்தேன் சொந்த வீட்டின் வேண்டாத விருந்தாளியின் விஜயமாய் மாறியிருந்தது எனக்கு! காபி தம்ளருக்கு முன்பு சானிடைஸரும் மாஸ்க்கும் வந்தது. என்னுடைய அன்பானவர்களுக்காக நான் அலைந்து திரிந்து வாங்கிய பொருட்கள் அனைத்துமே பிரிக்கப்படாமல் அநாதையாய் கிட்டத்தட்ட என் நிலைமையைப் போலவே?!

மாடியறையை ஓழிச்சி வைத்திருக்கிறேன். நீங்க ஒரு 15 நாள் தனியாகவே இருங்க என்றாள் மனைவி.காபி டிபன் எல்லாம் ரூமிற்கு வெளியே வைச்சிடறேன்.ஏங்க! எப்போ வருவீங்க என்று காதலாய் காதோரம் பேசிய அக்குரல்,யாரும் அறியாவண்ணம் ஊரிலிருந்து திரும்பிய தினமே ரகசிய அணைப்புகளும்,ஈரம் தெறிக்கும் முத்தங்கள் ஏதுமின்றி எட்டிக்காயாய் கசந்துவிட்டன அவளுக்கு. டிவியில் கொரானாவின் பாதிப்புகளைப் பட்டியல் இட்டுக் கொண்டு இருந்தார்கள். தனிமை தனிமை தனிமை கடலில் தத்தளிக்கும் சிறு படகென நான்.எனக்கு ஏதும் இல்லை என்பதை யாரும் நம்பத் தயாராக இல்லை.ராமனின் 14-வருடங்களின் சோதனையும் வேதனையும் எனக்கு இந்த 14 நாட்களாக தகித்தது என் உடல் வெப்பம், அது வெறும் நோயால் மட்டுமல்ல என்பது படிக்கும் உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். ஏம்மா உங்க வீட்டுலே வெளியூர்ல இருந்து யாரோ வந்திருக்காங்களே ? அவங்க எங்கே ?

மாடியிலே தான் இருக்கார், என் கணவர்தான்.அதற்குப் பிறகு சில குரல்கள் என் தனிமையின் கனத்தை அதிகரிக்கவே பரிசோதனைகள் மேற்கொண்டார்கள்.என் வலது கையின் மேற்பகுதியில் ஒரு ஸ்டாம்பால் நான் கட்டம் கட்டப்பட்டு விட்டேன். கொலைக் குற்றவாளியைக் கூட கண்டு அப்படியாரும் அஞ்சியிருக்க மாட்டார்கள்.என் அறையை நோக்கி இருந்த அக்கம் பக்கத்தினரின் பால்கனிக் கதவுகள் இறுக்கி மூடப்பட்டன.கிருமி நாசினிகளால் குளிக்க வைக்கப்பட்டேன். ஸார் அந்த மாடியறைக்குத் தனிவழியிருக்கு என்ற மனைவியின் குரலில் மாடிப்பக்கம் இருந்து வீட்டுக்குள் செல்லும் வழி அடைக்கப்பட்டு இருக்கிறதென்பதை உணர்ந்தேன் நோய் பரவாமல் இருக்க பாதுகாப்பாம்.அப்பா அம்மாவின் தனிமைக்காய் நான் ஒதுக்கிய அறை எனக்கே இன்று சிறையாகிப் போனது சற்றே பழக்கப்பட்ட சமையல் என் விரல்களைச் சுட்டுக்கொள்ளவில்லை.என் குடும்ப நலன் தேச நலன் கருதி தனிமைச் சுவரில் மாட்டப்பட்ட ஓவியமாகிப்போனேன். 
 

மாப்ளே எப்போடா ஊருக்கு வந்தே நம்ம வீட்டுலேதான் இன்னைக்கு விருந்து என்று அலப்பறை செய்த நண்பர்களின் எண்கள் கூட தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. அடுக்கடுக்காய் படையெடுத்த உறவுகள் ஒடுங்கியிருந்தது. பெருமை பேசி காட்சிப்பொருளாய் பார்க்க வந்த உறவுகள் எல்லாம் கைவிட்ட நிலையில் நூலைத் தொலைத்த காற்றாடியாய் தனித்துப் பறந்து கொண்டு இருக்கிறேன் நான்! இறப்பின் இதம் கூட சுகம்தான் இதயத்தை கூறுபோடும் இரக்கமற்ற நிகழ்வுகளைக் காட்டிலும்.தலைக்கு மேல் சுழலும் மின்விசிறியின் இறக்கைகள் கூட ஒன்றுக்கொன்று தொடாமல்! ஜன்னல் கம்பிகளுக்கு வெளியில் பார்க்கும் போது என்றோ சிறைக் கம்பிகளுக்கு வெளியே வெறித்த பார்வையுடன் இருந்த விலங்குகள் கண்முன்னே வந்தது. இயற்கை தன்னை மீட்டுக் கொள்ளப் போராடுகிறது கூடவே மக்களும்!