இந்திய கிரிக்கெட் அணி இரண்டாவது முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. கடந்த முறை பெற்ற வெற்றியை விட இந்தமுறை பெற்ற வெற்றி சிறப்பானதாக அமைந்துள்ளது. இந்த வெற்றி திரும்ப திரும்ப பேசப்பட்டுக்கொண்டே இருக்கப்போகிறது. ஆஸ்திரேலிய மண்ணில் பெற்ற முதல் டெஸ்ட் தொடர் வெற்றியைவிட, இரண்டாவது டெஸ்ட் தொடர் வெற்றி ஸ்பெஷலாக அமைந்துள்ளது. அதற்கான காரணங்கள்:
ஆஸ்திரேலியாவில் இந்தியா முதல்முறை டெஸ்ட் தொடரை வென்ற போது பரவலாக வைக்கப்பட்ட விமர்சனம், முக்கிய வீரர்களான ஸ்மித் மற்றும் வார்னர் இல்லை என்பது. அந்த விமர்சனங்களுக்கு, அவர்கள் இருக்கும்போதே தொடரை வென்று பதிலடி அளித்துள்ளது இந்திய அணி. ஸ்மித், வார்னர் யார் இருந்தாலும் இந்திய அணியால் வெல்லமுடியும் என்பதை செய்து காட்டியிருக்கிறார்கள் நமது வீரர்கள்.
விராட் கோலி ஒரு டெஸ்ட் போட்டியில்தான் ஆடுவர் என்பது தெரிந்ததுமே, இந்திய அணி தொடரை வெல்வது அல்ல சமன் செய்வதே பெரிய விஷயம் என கருதப்பட்டது. முதல் டெஸ்டில் தோற்றதுமே இந்தியா 4-0 என தோற்கும் என முன்னாள் ஆஸ்திரேலியா வீரர்கள் அடித்து சொன்னார்கள். ஆனால் விராட் கோலி இல்லாமலே தொடரை வென்று அவர்களின் வாயை அடைத்திருக்கிறது நமது இந்திய அணி. ஆஸ்திரேலியாவின் மைன்ட் கேம்களுக்கு நமது ஆட்டத்தின் மூலமாகவே பதிலளித்திருக்கிறோம்.
இந்தியாவின் முக்கிய பந்து வீச்சாளர் இஷாந்த் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகல் என்ற பின்னடைவோடு, ஆஸ்திரேலியாவிற்கு வந்த இந்திய அணிக்கு ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோரின் காயங்கள் அடுத்தடுத்த அதிர்ச்சியாக அமைந்தன. இருப்பினும் இந்தியா பின்வாங்கவில்லை. காயங்களுடன் போராடிக்கொண்டே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியிருக்கிறோம். மூன்றாவது டெஸ்ட்டில் ஹனுமா விஹாரி மற்றும் அஸ்வின் ஆகியோர் காயத்தோடு ஆடி இந்திய அணியை கரை சேர்த்து விதம், அணியினுடைய, அணி வீரர்களுடைய போராட்ட குணத்திற்கு மிகப்பெரும் எடுத்துக்காட்டு. அந்த போராட்டக் குணம் இல்லை என்றால் ஆஸ்திரேலியாவினை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது என்பது என்றும் எட்டாக்கனிதான். இறுதி டெஸ்ட் போட்டியில் பும்ராவும் இல்லாமல், அனுபவமற்ற பந்து வீச்சாளர்களை வைத்தே போட்டியை வென்றது இங்கு குறிப்பிடத்தக்கது.
இந்த தொடரின் முதல் போட்டியிலேயே இந்தியா ஒரு சாதனையை நிகழ்த்தியது. ஆனால் மிகவும் மோசமான சாதனை. 36/9 - இந்திய அணி ஒரு டெஸ்ட் இன்னிங்சில் எடுத்த குறைந்தபட்ச ரன்கள். இந்த சாதனையோடுதான் இந்தியா தொடரை ஆரம்பித்தது. தொடருக்கு இப்படி ஒரு தொடக்கம் என்றால் அது எந்த வீரரையும், அணியையும் கலங்கடித்து விடும். அதனையும் தாண்டி வந்து நமது வீரர்கள் சரித்திரம் படைத்தது இருக்கிறார்கள். 36 ரன்களில் இன்னிங்ஸ் முடிவடைந்தபோது, விராட் ஒரு மணி நேரத்தில் ஆட்டத்தை இழந்து விட்டதாக கூறியிருந்தார். அதன்பிறகு மொத்த தொடரிலும், பெரும்பாலான நேரங்களில் இந்திய அணியே ஆதிக்கம் செலுத்தியது. ஆஸ்திரேலியாவில், இன்னொரு அணி தொடர் முழுக்க ஆதிக்கம் செலுத்துவது என்பதே ஒரு சாதனைதான்.
இவற்றையெல்லாம் தாண்டி, இந்த தொடர்வெற்றியை கொண்டாட மிகமுக்கிய காரணம் ஒன்று இருக்கிறது. அதனை ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது வாழ்த்து செய்தியிலேயே தெரிவித்துள்ளார். இந்த தொடரின் ஒவ்வொரு செஸ்ஸனிலும் (session) ஒரு ஹீரோ கிடைத்ததாக சச்சின் குறிப்பிட்டிருக்கிறார். அது 100 சதவீதம் உண்மை. இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவில் விளையாடிய அணிக்கும், இந்த தொடரில் ஆடிய அணிக்கும் அதுதான் பெரும் வித்தியாசம். அதுதான் இந்த வெற்றியை இன்னும் ஸ்பெஷலாக மாற்றியிருக்கிறது. இதற்கு முன் ஆஸ்திரேலியாவில் ஆடிய இந்திய அணிகள் `ஒன்று இரண்டு வீரர்கள் மட்டுமே அணியை தூக்கி நிறுத்துவார்கள் ஆனால் இந்தமுறை கிட்டத்தட்ட அனைத்து வீரர்களுமே வெற்றிக்கான தூண்களாய் அமைந்திருக்கிறார்கள். ஒவ்வொரு செஸ்ஸனிலும் ஒரு வீரர் அணிக்காக போராடினார். தொடர் முழுவதும் நிதான ஆட்டத்தால் புஜாரா ஆஸ்திரேலியாவை திண்டாடவைத்தாரென்றால், இரண்டாவது டெஸ்டில் ரஹானே, பும்ரா மூன்றாவது டெஸ்டில் பந்த், அஸ்வின், விஹாரி, கடைசி டெஸ்டில் கில், சிராஜ், ஷார்துல் தாக்குர், வாஷிங்டன் சுந்தர், பந்த் என முக்கியமான கட்டத்தில், முன்னணி வீரர்கள் மட்டுமின்றி அறிமுக வீரர்கள், அனுமபவமில்லா வீரர்கள் என அனைவரும் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்த தொடர் வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். இவர்கள் மட்டுமின்றி இரண்டாம் ஹீரோக்களாக ஜடேஜா, நடராஜன், ரோகித் என அனைவரும் வெற்றிக்கு பங்களித்திருக்கிறார்கள். இதுதான் இந்த வெற்றியை என்றும் நினைவில் வைத்துக் கொள்ளத்தக்கதாக மாற்றியிருக்கிறது.