மூன்று விதமான போட்டிகளிலிலும் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்துவந்த விராட் கோலி, நேற்று (08.11.2021) இறுதிமுறையாக நமீபியாவுக்கு எதிரான போட்டியில் இருபது ஓவர் அணியை வழிநடத்தினார். இந்தப் போட்டியில் இந்தியா ஒன்பது விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்தநிலையில், இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ரோஹித் ஷர்மாதான் அடுத்த கேப்டனாக நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டாலும், வயதின் காரணமாக அதில் மாற்றம் இருக்கலாம் எனவும் கூறப்பட்டது.
இந்தநிலையில், இந்திய இருபது ஓவர் அணியின் அடுத்த கேப்டன் ரோகித் ஷர்மாதான் என்பதை விராட் கோலியும், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து விடைபெறும் ரவி சாஸ்திரியும் உறுதி செய்துள்ளனர். நேற்றைய போட்டியின் டாஸின்போது, "இந்த அணியை அடுத்த நபர் முன்னோக்கிக் கொண்டுசெல்வதற்கான நேரம் இது. ரோஹித் ஷர்மா சிலகாலமாக விஷயங்களைக் கவனித்துவருகிறார். டிரஸ்ஸிங் ரூமில் நாங்கள் எப்போதும் தலைவர்களாக இருப்போம்" என விராட் கோலி தெரிவித்தார்.
அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய ரவி சாஸ்திரி, "ரோஹித் ஷர்மா கேப்டன்சிக்கு திறமையான நபர். பல ஐபிஎல் கோப்பைகளை வென்றுள்ளார். அவர் நீண்டகாலமாக இந்த அணியின் துணை கேப்டனாக இருந்துவருகிறார்" என கூறியுள்ளார்.