அடுத்த ஆண்டு துவக்கத்திலேயே இந்திய அணி இலங்கையுடன் 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் டி20 போட்டிக்கான இந்திய அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் துணை கேப்டனாக சூர்யகுமார் யாதவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஒருநாள் தொடருக்கு கேப்டனாக ரோஹித் சர்மாவும் துணை கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்திய டி20 அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது என சூர்யகுமார் யாதவ் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், “இந்திய அணியில் துணை கேப்டன் பதவி நான் எதிர்பார்க்காதது. இது கனவா என கண்களை மூடிக்கொண்டு என்னை நானே கேட்டுக்கொள்கிறேன். இது இன்னும் கனவுபோல்தான் உள்ளது.
இந்திய அணி அறிவிக்கப்பட்டதும் என் தந்தை எனக்கு அந்தச் செய்தியை அனுப்பினார். மேலும், இதற்காக எந்த அழுத்தத்தையும் எடுத்துக்கொள்ள வேண்டாம் உனது பேட்டிங்கை அனுபவித்து விளையாடு எனக் கூறினார். இது எனது பல வருட கடின உழைப்புக்கு கிடைத்த பலன். நான் இந்தியாவிற்காக விளையாடிய காலத்திலிருந்து என் மீது எப்போதும் பொறுப்பும் அழுத்தமும் இருந்தது. அதே சமயத்தில் எனது ஆட்டத்தையும் நான் ரசித்து விளையாடினேன்.
பாண்டியாவுடனான என் உறவு எப்பொழுதும் நன்றாகவே இருக்கிறது. இந்தியா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இருவரும் சேர்ந்து விளையாடியுள்ளோம். அவரது கேப்டன்ஷிப் கீழ் விளையாடுவதை நான் மிகவும் ரசிக்கிறேன்” எனக் கூறினார்.