பிரேசிலின் முன்னாள் நட்சத்திர கால்பந்து வீரர் ரொனால்டினோ தவறான ஆவணங்களைப் பயன்படுத்தி பராகுவே நாட்டிற்குள் நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியுள்ளன.
புதன்கிழமை இரவு ரொனால்டினோவும் அவரது சகோதரர் ராபர்டோவும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. போலி பாஸ்போர்ட் தொடர்பான புகாரில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ரொனால்டினோ சர்ச்சையில் சிக்கியிருப்பது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த 2015 ஆம் ஆண்டில், அவரும் அவரது சகோதரரும் பாதுகாக்கப்பட்ட ஏரியில் முறையான உரிமம் பெறாமல் சட்டவிரோதமாக மீன்பிடி வலையைக் கட்டியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சர்ச்சையில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. பிரேசிலின் சிறந்த கால்பந்தாட்ட வீரரான ரொனால்டினோ 2004 மற்றும் 2005 ஆம் ஆண்டுகளின் சிறந்த கால்பந்தாட்ட வீரருக்கான ஃபிஃபா விருதினையும், 2005 ஆம் ஆண்டு பாலோன் டி'ஓர் விருதையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.