இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஐந்தாவது டெஸ்ட் போட்டி இமாச்சலப் பிரதேசத்தின் தரம்சாலா மைதானத்தில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்ய தீர்மானித்தார். இந்திய அணியில் அறிமுக வீரராக தேவ்தத் படிக்கல் சேர்க்கப்பட்டார்.
முதலில் களம் இறங்கிய கிராவ்லி, டக்கெட் இணை நிதானமாக ஆடத் தொடங்கியது. டக்கெட் 27 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். அடுத்து, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட போப் 11 ரன்களில் ஆட்டம் இழந்து வெளியேறினார். சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த கிராவ்லி அரைசதம் கடந்து 79 ரன்களில் ஆட்டமிழந்தார். பேர்ஸ்டோ 29 ரன்களில் வெளியேறினார். கடந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு வந்த நட்சத்திர ஆட்டக்காரர் ஜோ ரூட் 24 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.
கேப்டன் ஸ்டோக்ஸ் ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த வீரர்களில் ஃபோக்ஸ் 24, தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர். மார்க் வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்திய அணியின் சுழற்பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் இங்கிலாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து 218 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
சிறப்பாக பந்து வீசிய குல்தீப் யாதவ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவருக்கு அடுத்தபடியாக இந்தியாவின் சுழல் ஜாம்பவான் அஸ்வின் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா ஒரு விக்கெட் எடுத்தார். இந்திய அணி தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கியது. சிறப்பான தொடக்கம் தந்த ரோஹித் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் அரைசதம் கடந்தனர். ஒரே ஓவரில் மூன்று சிக்சர்களைப் பறக்க விட்ட ஜெய்ஸ்வால் 57 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 30 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 135 ரன்கள் எடுத்தது. ரோஹித் அரைசதம் கடந்து 52 ரன்களுடனும், கில் 26 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
பின்னர் இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் மற்றும் கில் சிறப்பாக ஆடினர். 13 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்சர்கள் என அதிரடியாக ஆடிய அவர், இந்த தொடரில் தனது இரண்டாவது சதத்தைப் பதிவு செய்தார். இது டெஸ்ட் போட்டிகளில் ரோஹித்தின் 12 ஆவது சதமாகும் மற்றும் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக இது 4 ஆவது சதமாகும். இதன் மூலம் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்துக்கு எதிராக அதிக சதங்கள் எனும் இந்திய முன்னாள் ஜாம்பவான் கவாஸ்கரின் சாதனையை சமன் செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து கில்லும் சதமடித்தார்.ஆனால் சதமடித்த வேகத்திலேயே இருவரும் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் இறங்கிய படிக்கல் மற்றும் சர்பிராஸ் இணை அதிரடியாக ஆடி வருகிறது. தற்போது இந்திய அணி 72 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 315 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது. 7 பவுண்டரிகளுடன் படிக்கல் 31 ரன்களுடனும், சர்பிராஸ் 8 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.
வெ.அருண்குமார்