இந்திய கிரிக்கெட் அணி இம்மாத இறுதியில் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட், 3 ஒருநாள், 3 இருபது ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட இருக்கிறது. இதில் கலந்து கொள்ளும் இந்திய வீரர்கள் பட்டியல் வெளியானதும் பெரும் சர்ச்சை வெடித்தது. முன்னணி வீரரான ரோகித் ஷர்மா புறக்கணிப்பு, வீரர்கள் தேர்வில் பாரபட்சம் எனப் பலரும் அதிருப்தி தெரிவித்து வந்தநிலையில், புதிய திருப்பமாக பி.சி.சி.ஐ அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனான விராட் கோலி ஒருநாள், இருபது ஓவர் போட்டித் தொடரில் முழுமையாக விளையாடிவிட்டு, டெஸ்ட் போட்டித் தொடரில் முதல் போட்டியில் மட்டும் விளையாட உள்ளார். அதன்பின் விராட் கோலி இந்தியா திரும்ப இருப்பதால், டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் ரோகித் ஷர்மா சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து பி.சி.சி.ஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், "பி.சி.சி.ஐ-யின் மருத்துவக் குழு, ரோகித் ஷர்மாவை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. ரோகித் ஷர்மாவுடன் கலந்தாலோசித்ததில், முழுமையாகக் குணமடைய வேண்டி ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டித் தொடரில் ஓய்வளித்து விட்டு, டெஸ்ட் போட்டிகளுக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்" எனக் கூறப்பட்டுள்ளது.