இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கும் ஆசியக் கோப்பை கிரிக்கெட் 2023 தொடர் நடைபெற்று வருகிறது. இதன் நான்காவது லீக் ஆட்டத்தில் நேற்று (03-09-2023) வங்கதேசம்-ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இதில் வங்கதேசம் அணி 89 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. சுவாரஸ்யமான நேற்றைய ஆட்டத்தில் இரண்டு சதம் விலாசப்பட்டுள்ளது.
ஆசியக் கோப்பை 2023ன் நான்காவது லீக் ஆட்டம் நேற்று கடாபி ஸ்டேடியத்தில் வங்கதேசம் - ஆப்கானிஸ்தான் இடையே நடந்தது. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் இலங்கையிடம் தோற்றதால் இரண்டாம் ஆட்டத்தை கட்டாயம் வெல்ல வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. இந்நிலையில், வங்கதேசம் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மெஹிதி ஹசன் மிராஸ் மற்றும் முகமது நயீம் கூட்டணி நல்ல தொடக்க ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 60 ரன்களை இந்த கூட்டணி எட்டியபோது நயீம் 28 ரன்கள் எடுத்து , முஜீப் ரஹ்மான் வீசிய சுழற்பந்தில் வீழ்ந்தார். அடுத்து களம் கண்ட தௌஹித் ஹ்ரிடாய் டக் அவுட் ஆகி வெளியேறினார். 60 ரன்களில் 2 விக்கெட்டுகள் இழந்த வங்கதேசம் சற்று நிலை தடுமாறியது.அடுத்ததாக களமிறங்கிய நஜ்முல் ஹோசைன் சாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த ஆட்டம் சூடுபிடிக்கத் தொடங்கியது. பின்னர், மெஹிதி ஹசன்- நஜ்முல் கூட்டணி அடித்து ஆட ஆரம்பித்தனர். இவர்களின் பார்ட்னர்ஷிப் 150 ரன்களை அணிக்கு குவித்தது. ஹசன் 119 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து சதம் அடித்த நிலையில், காயம் காரணமாக ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெற்றார். தொடர்ந்து நஜ்முலும் 105 பந்துகளில் 104 விளாசி ஆட்டம் இழந்தார். இதன் மூலம் வங்கதேசம், 43 ஓவர்களில் 262 ரன்கள் சேர்த்திருந்தது. இவர்களைத் தொடர்ந்து, ரஹிம் 15 பந்துகளில் 25 ரன்கள், ஹொசைன் 11 ரன்கள் என எடுத்தனர். அடுத்து களமிறங்கிய அணியின் கேப்டன் சகிப் அதிரடியாக 18 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து நாட்-அவுட் பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார்.
50 ஓவர் முடிவில் வங்கதேசம் 5 விக்கெட் இழந்து 334 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. ஆப்கானிஸ்தான் பௌலர்கள் முஜீப் மற்றும் குல்புதின் தலா 1 விக்கெட் எடுத்தனர். இந்த சவாலான இலக்கை எதிர்கொள்ள ஆப்கானிஸ்தான் அணி களம் இறங்கியது. ஆப்கானிஸ்தானின் ஆட்டம் எதிர்பாராத வகையில் முதலில் அமையவில்லை. அணியின் ஓப்பனிங் வீரர் குர்பாஸ் 1 ரன்னில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். பின்னர், ரஹ்மத் ஷா- ஜத்திரன் கூட்டணி 78 ரன்கள் சேர்த்து அணிக்கு வலு சேர்த்தனர். ரஹ்மத் 33 ரன்களுடன் ஆட்டம் இழக்க, கேப்டன் ஷாகிதி களமிறங்கினார்.
ஓப்பனராக இறங்கிய 74 பந்துகளில் 75 ரன்கள் எடுத்து அவரும் ஆட்டம் இழந்து வெளியேறினார். இவருக்கு துணையாக நின்று விளையாடி சதம் அடித்த கேப்டன் ஷாகிதியும் 51 ரன்னில் அவுட் ஆனார். பின்னர் ஆப்கானிஸ்தானின் ஸ்கோர் 4 விக்கெட் இழந்து 193 ரன்னை எடுத்து சற்று தோய்ந்திருந்தது. அடுத்து களம் கண்ட வீரர்கள் வேகமாக ஆட்டம் இழக்க ஆப்கானின் வெற்றி வாய்ப்பு நழுவத் தொடங்கியது. கீழ் வரிசையில் பேட்டிங் செய்து ரஷித் கான் 15 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். 10 விக்கெட்டுகளையும் பறிகொடுத்து ஆப்கானிஸ்தான் 44.3 ஓவரில் 245 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. வங்கதேச அணி பந்துவீச்சில், டஸ்கின் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளை கைப்பற்ற, சொரிபுல் இஸ்லாம் 3 விக்கெட் வீழ்த்தினார். நேற்றைய ஆட்டத்தை 89 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம், ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
இன்று (04-09-2023) நடைபெறும் ஐந்தாவது லீக் ஆட்டத்தில், இந்தியா-நேபாள் அணிகள் பல்லேகலே ஸ்டேடியத்தில் மோதவுள்ளது. முதல் போட்டியை இழந்த நேபாள் அணி கடும் ஆட்டத்தை தொடுக்கும். அதேபோல, இந்தியாவும் முதல் ஆட்டத்தை டிரா செய்துள்ளதால், இந்த ஆட்டத்தில் வேகம் கொள்ளும் என எதிர்பார்க்கலாம். இந்திய நேரப்படி 3.00 மணிக்கு இந்த ஆட்டம் தொடங்கும்.