ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் ஆண்டுதோறும் (சில ஆண்டுகளைத் தவிர்த்து) இந்தியாவில் நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கரோனா பரவலின் காரணமாக வெளிநாட்டில் நடந்த இத்தொடர் இந்தாண்டு இந்தியாவில் ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்கி, மே 30 வரை நடைபெறவுள்ளது. கரோனா அச்சத்தால் இந்த முறை அகமதாபாத், பெங்களூரு, சென்னை, டெல்லி, மும்பை மற்றும் கொல்கத்தா உள்ளிட்ட 6 மைதானங்களில் மட்டுமே போட்டிகள் நடைபெறவுள்ளன. இதில், உலகின் பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் தான், பிளே ஃஆப் மற்றும் இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் மொஹாலியிலும் ஐ.பி.எல் போட்டிகளை நடத்துமாறு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங், இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அமரீந்தர் சிங், "ஒருநாளைக்கு ஒன்பது ஆயிரம் கரோனா தொற்றுகள் பதிவாகும் மும்பையில் உங்களால் போட்டியை நடத்த முடியுமென்றால், மொஹாலியில் ஏன் நடத்த முடியாது எனக் கேட்டு இந்திய கிரிக்கெட் வாரியத்துக்குக் கடிதம் எழுதியுள்ளேன். ஐ.பி.எல் போட்டிகளுக்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாங்கள் எடுப்போம்" எனத் தெரிவித்துள்ளார்.