Skip to main content

அப்ரிடியின் சர்ச்சை கருத்து... இந்திய வீரர்கள் கடும் கண்டனம்...

Published on 18/05/2020 | Edited on 18/05/2020

 

indian players against afridi

 

இந்தியா மற்றும் பிரதமர் மோடி ஆகியோருக்கு எதிரான அப்ரிடியின் கருத்துக்கு இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர். 

இந்தியா குறித்து அடிக்கடி சர்ச்சை கருத்துக்களைத் தெரிவித்து வரும் அப்ரிடி அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பேசுகையில், உலகமே கரோனா எனும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை விட மோசமானது மோடியின் மனமும் இதயமும். காஷ்மீரில் 7 லட்சம் ராணுவத்தினரை அவர் குவித்துள்ளார் எனக் கூறினார். அவரது இந்தக் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் கம்பீர், யுவராஜ் சிங், ஹர்பஜன், தவான் ஆகியோருக்கு அப்ரிடிக்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாகப் பேசிய கம்பீர், "சிலருக்கு வயதுதான் ஆகிறதே தவிர மனதளவில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. அப்ரிடி இப்போதுதான் 16 வயது நபர் போல் பேசுகிறார். 
 


உலகமே கரோனாவினால் பாதிக்கப்பட்டிருக்கும்போது காஷ்மீர் பற்றியும், பிரதமர் மோடியைப் பற்றியும் அவதூறாகப் பேசுகிறார், இது உங்களுடைய உங்கள் நாட்டுடைய எண்ணங்களை வெளிப்படுத்துகிறது. பாகிஸ்தானில் ஒருவர் மீது வெளிச்சம் விழ வேண்டுமென்றால் இந்தியாவையும், இந்தியப் பிரதமரையும் திட்டினால் போதும். ஏழைகளுக்கு உணவு கொடுக்கச் சென்று விட்டு இப்படியா பேசுவது? உங்கள் நாட்டு நிலையைப் பாருங்கள், அங்குப் பணம் இல்லை மக்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் நீங்கள் அரசியல் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். கரோனா காலத்திலும் எல்லை வழியாகப் பயங்கரவாதிகளை அனுப்புகிறீர்கள். கரோனா காலத்திலும் உங்கள் நாடு எல்லை தாண்டிய பயங்கரவாதம் செய்து வருகிறது.

கிரிக்கெட்டில் கூட உங்களை யாரும் சீரியசாக எடுத்துக்கொள்வதில்லை. இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருந்தால் உங்களை யாரும் மதிக்கப்போவதில்லை" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல இந்த விவகாரத்தில் கருத்துத் தெரிவித்துள்ள யுவராஜ் சிங், "மோடிக்கு எதிரான அப்ரிடியின் கருத்தை ஏற்க முடியாது. மனித நேய அடிப்படையில்தான் அவரது முயற்சிக்கு உதவச் சொன்னேன் இனி ஒருபோதும் ஆதரவளிக்க மாட்டேன்" எனத் தெரிவித்துள்ளார். அதேபோல ஹர்பஜன் சிங்கும் யுவராஜின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்து, இனி அப்ரிடிக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை எனத் தெரிவித்துள்ளார். இவர்களைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தவானும் அப்ரிடியைக் கடுமையாக விமர்சித்துள்ளார்.