பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் மோதும், ஆசிய கோப்பை போட்டி இன்று தொடங்குகிறது.
துபாயில் தொடங்கிய ஆசிய கிரிக்கெட் போட்டிகளில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங், இலங்கை, வங்காளதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தொடங்கிய தொடரில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் அணிகள் ஒரு பிரிவிலும், வங்காளதேசம், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் இன்னொரு பிரிவிலும் களமிறங்கின.
விறுவிறுப்பான இந்தத் தொடரில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி மீதே அதிக எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக, செப்டம்பர் 17-ம் தேதியன்று ஹாங்காங் அணியுடன் மோதிய மறுநாளே பாகிஸ்தான் அணியுடன் மோதவேண்டிய சூழல், இந்தியாவிற்கு நெருக்கடியாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இருந்தபோதிலும், ஹாங்காங் மாதிரியான சின்ன அணியுடன் மோதிவிட்டு, பாகிஸ்தானை எதிர்கொள்வது சுலபம் என்றே பலரும் நினைத்தனர். ஆனால், நேற்றைய போட்டியில் ஹாங்காங் அணி பேட்டிங், பவுலிங் என இருபிரிவுகளிலும் சிறப்பாக விளையாடியது. ஆனால், இறுதியில் இந்திய அணியே வென்றது. ஓய்வில்லாமல் மறுநாளே தொடங்கும் இந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு சாதகமாக அமையும் வாய்ப்புள்ளது. இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்கியுள்ளது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. டாஸ் வென்ற பாக். அணி பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது.