
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இறுதியாக இந்த தொடர் 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்றது. இந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி பாகிஸ்தான் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. இத்தகைய சூழலில் தான் இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் துபாயில் நேஷனல் மைதானத்தில் இன்று (23.02.2025) நடைபெற்ற போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. கடைசி பந்தில் விராட் கோலி 4 ரன்கள் அடித்து திரில் வெற்றிக்கு வித்திட்டுள்ளார். இந்த போட்டியில் சதம் விளாசியுள்ளார் கோலி. முதலில் விளையாடிய பாகிஸ்தான் 49.4 ஓவர்களில் 241 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய இந்தியா 42.3 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாட்டில் பல்வேறு இடங்களிலும் கிரிக்கெட் ரசிகர்கள் வெற்றியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 14 ஆயிரம் ரன்களை கடக்க இந்திய வீரர் விராட் கோலிக்கு 15 ரன்களே தேவை என்ற நிலை இருந்தது. விராட் கோலி 298 போட்டிகளில் விளையாடி 13 ஆயிரத்து 985 ரன்களுடன் இருந்தார். இன்று விளையாடிய போட்டியில் விராட் கோலி சதமடித்த நிலையில் 14 ஆயிரம் ரன்களை கடந்து புது வரலாற்று சாதனை படைத்துள்ளார் விராட்.