இந்திய வீரர் அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீசுவதற்கு இடைக்காலத் தடைவிதித்து ஐசிசி இன்று உத்தரவிட்டுள்ளது. இந்திய, ஆஸ்திரேலய அணிகள் மோதிய ஒரு நாள் தொடரின்போது, சிட்னியில் நடந்த முதல் போட்டியில் அம்பதி ராயுடு பந்துவீசினார். அவரின் அந்த பந்துவீச்சு ஐசிசி விதிமுறைகளுக்கு முரணானது எனவும், ஐசிசி பந்துவீசும் விதிகளுக்கு உட்பட்டு இல்லை என சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அம்பதி ராயுடு சர்வதேச போட்டிகளில் பந்துவீசத் தடை விதித்து ஐசிசி இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'ஐசிசி வழங்கிய 14 நாட்களில் அம்பதி ராயுடு தனது பந்துவீச்சைச் சோதனைக்கு உட்படுத்தி சந்தேகத்தை நிவர்த்தி செய்யவில்லை. எனவே ஐசிசி விதி 4.2 ன்படி,அம்பதி ராயுடு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துவீச இடைக்கால தடைவிதிக்கப்படுகிறது. மேலும் அம்பதி ராயுடு தனது பந்துவீச்சை சோதனைக்கு உட்படுத்தி பந்துவீச்சு முறையை தெளிவுபடுத்தும் வரை இந்த தடை அமலில் இருக்கும். மேலும் அவர் உள்நாட்டுப் போட்டிகளில் பந்துவீச எந்தவித தடையும் இல்லை' என தெரிவிக்கப்பட்டுள்ளது.