ஐபிஎல் தொடரில் விளையாடும் எட்டு அணிகளில் உள்ள ஒரு சில முக்கிய வெளிநாட்டு வீரர்கள் உலகக்கோப்பை தொடருக்கான பயிற்சி மற்றும் சில சர்வதேச தொடர்கள் காரணமாக பாதியிலேயே வெளியேற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அணியின் வெற்றியை தீர்மானிப்பதில் அதிக பங்கு வகித்து வந்த சில வெளிநாட்டு வீரர்கள் விலகுவது அந்த அணிகளுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இங்கிலாந்து வீரர்கள் இந்த வாரம் தங்கள் நாடுகளுக்கு செல்லும் நிலையில், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணியை சேர்ந்த வீரர்கள் மே முதல் வாரத்தில் கிளம்பவுள்ளனர். நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் வீரர்கள் மட்டுமே இறுதி வரை விளையாடவுள்ளனர். மேலும் சர்வதேச போட்டிகளில் ஓய்வு பெற்ற வெளிநாட்டு வீரர்கள் மற்றும் உலகக்கோப்பை தொடரில் விளையாடாத சில வெளிநாட்டு வீரர்கள் ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடுவார்கள்.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சர்வதேச முத்தரப்பு தொடர் இருந்தாலும், ஐபிஎல் விளையாடும் வீரர்கள் முத்தரப்பு தொடருக்கான தேசிய அணியில் இடம்பெறவில்லை. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் ஐபிஎல் இறுதிப்போட்டி வரை விளையாடுவார்கள். இலங்கை அணியை பொறுத்தவரை மலிங்கா மட்டுமே விளையாடி வருகிறார். அவரும் கடைசி வரை விளையாட வாய்ப்புண்டு.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
விலகவுள்ள வீரர்கள்: டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ்.
மாற்று வீரர்கள்: மார்டின் கப்தில், சாஹா, முஹம்மது நபி.
அணியில் தொடக்க ஆட்டக்காரர்களான டேவிட் வார்னர், ஜானி பைர்ஸ்டோவ் ஆகியோர் இந்த தொடரில் சிறப்பான ஓபன்னிங் பார்ட்னர்ஷிப் தந்துள்ளனர். இந்த தொடரில் வார்னர் 574 ரன்கள், சராசரி 71.75 மற்றும் பைர்ஸ்டோவ் 445 ரன்கள், சராசரி 55.62 வைத்துள்ளனர். பைர்ஸ்டோவ் சென்னை அணியுடனான போட்டியுடன் விலகியுள்ள நிலையில் வார்னர் இன்னும் இரு போட்டிகள் மட்டுமே விளையாடுவார். சன்ரைசர்ஸ் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்த இருவரும் விலகுவது பெரும் பாதிப்பாக இருக்கும். மிடில் ஆர்டர் பலவீனமாக உள்ள சன்ரைசர்ஸ் அணிக்கு பலமே ஒப்பனிங் தான். ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெரும் நிலையில் உள்ள சன்ரைசர்ஸ் அணி இருவரின் இழப்பை சரிசெய்ய வேண்டிய நிலையில் உள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
விலகவுள்ள வீரர்கள்: ஜோஸ் பட்லர், ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர்.
மாற்று வீரர்கள்: ஆஷ்டன் டர்னர், லியாம் லிவிங்ஸ்டோன், சோதி மற்றும் ஓஷேன் தாமஸ்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற நட்சத்திர வீரர்கள் விலகுவது அந்த அணிக்கு பெரும் அடியாக அமையும். கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இன்னும் சில போட்டிகளில் மட்டுமே விளையாடுவார். இங்கிலாந்து வீரர்கள் பாகிஸ்தான், அயர்லாந்து தொடரில் மே முதல் வாரம் விளையாடவுள்ளனர். ஓரளவுக்கு ஃப்ளே ஆப் வாய்ப்புள்ள ராஜஸ்தான் அணிக்கு முக்கிய வீரர்கள் செல்வது மேலும் பலவீனமாக்கும். பேட்டிங், பவுலிங் என ஒட்டுமொத்த அணியின் காம்பினேசனையும் சரி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:
விலகவுள்ள வீரர்கள்: டேல் ஸ்டெயின், மொயின் அலி, மார்கஸ் ஸ்டோனிஸ், ஹெய்ன்ரிக் க்ளாசென்.
மாற்று வீரர்கள்: டி கிராண்ட்ஹோம், டிம் சவுதி.
தொடர் வெற்றிகளை குவித்து வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் மொயின் அலி, டேல் ஸ்டெயின், மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் செல்லவிருப்பது சற்று ஏமாற்றமளிக்கிறது. தொடக்கத்தில் தொடர் தோல்விகளை சந்தித்து வந்த பெங்களூர் அணி ஸ்டெயின் வந்த பிறகு வெற்றி பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
விலகவுள்ள வீரர்கள்: டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர்.
மாற்று வீரர்கள்: சாம் பில்லிங்ஸ். முரளி விஜய்.
புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டூ பிளெசிஸ், இம்ரான் தாஹிர் ஆகியோர் செல்லவிருப்பது பெரும் தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஸ்பின் மற்றும் தொடக்க ஆட்டக்காரர்களாக சிறப்பாக விளையாடி வரும் இருவரும் செல்லும் நிலையில் மாற்று வீரர்கள் ஃபார்ம் இல்லாமல் இருப்பது சென்னை அணிக்கு சவாலான ஒன்று தான்.
டெல்லி கேபிடல்ஸ்:
விலகவுள்ள வீரர்கள்: ரபாடா.
மாற்று வீரர்கள்: ட்ரென்ட் போல்ட்.
இளம் கேப்டன், இளம் வீரர்கள் கொண்ட டெல்லி கேபிடல்ஸ் அணியில் முக்கிய பந்து வீச்சாளர் ரபாடா விலகுவது ஃபாஸ்ட் பவுலிங் யூனிட்டை பலவீனமாக்கும். இந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ள ரபாடா விலகுவது டெல்லி அணிக்கு ஏமாற்றமளிக்கும். ரபாடாவின் இழப்பை சரி செய்யும் அளவிற்கு அந்த அணியில் வேறு வீரர் இல்லை என்பது முக்கியமான ஒன்று.
மும்பை இந்தியன்ஸ்:
விலகவுள்ள வீரர்கள்: ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப், குவின்டன் டி காக்.
மாற்று வீரர்கள்: எவின் லீவிஸ், மிட்செல் மெக்லெனகான், ஹென்ரிக்ஸ்.
மும்பை அணியில் ஜேசன் பெஹ்ரண்டோர்ஃப் மற்றும் சிறப்பாக ஒப்பனிங் அமைத்து தரும் குவின்டன் டி காக் ஆகியோர் செல்லவுள்ள நிலையில் அணிக்கு பலவீனமாக அமையுமா என்பது மாற்று வீரர்களின் ஆட்டத்தை பொறுத்தே உள்ளது. ஏறக்குறைய ஃப்ளேஆப் செல்லும் நிலையில் உள்ள மும்பை அணிக்கு சிறந்த ஒப்பனிங் இல்லாமல் போவது இனி வரும் போட்டிகளில் சவாலாக அமையும்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
விலகவுள்ள வீரர்கள்: டேவிட் மில்லர்.
மாற்று வீரர்கள்: நிக்கோலஸ் பூரண், மோயஸ் ஹென்றிக்குஸ், கருண் நாயர்.
பஞ்சாப் அணியில் டேவிட் மில்லர் ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். பேட்டிங்கில் மில்லர் இழப்பை சரி செய்ய மாற்று சில வீரர்கள் உள்ளனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
விலகவுள்ள வீரர்: ஜோ டென்லி.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ஜோ டென்லி பவுலிங்கில் பெரிய அளவில் அணிக்கு பங்களிக்கவில்லை. ஒரே ஒரு போட்டியில் மட்டுமே விளையாடியுள்ள நிலையில் கொல்கத்தாஅணிக்கு அதிகளவில் பாதிப்பு இருக்காது.
தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கெயில், ரஸ்ஸல், பூரண், கார்லோஸ் ப்ராத்வேட், சிம்ரன் ஹெட்மியர் ஆகியோர் உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றுள்ளனர். கெயில், ரஸ்ஸல் ஆகியோர் செல்லும் நிலை ஏற்ப்பட்டால் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணி பெரிய அளவில் பாதிக்கும். ஒரு வேளை ஃப்ளேஆப் சுற்றுக்கு தகுதி பெரும் நிலையில் உள்ள இரு அணிகளுக்கும் இவர்களின் இடத்தை நிரப்பும் அளவிற்கு வேறு வீரர்கள் அணியில் இல்லை.