இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி, எட்க்பாஸ்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. தொடக்கத்தில் நிதானமாக ஆடினாலும், இந்திய அணியின் பவுலர்களின் சிறப்பான பந்துவீச்சால் அந்த அணி தடுமாறியது.
ஜோ ரூட், ஜானி பேர்ஸ்டோ இணை விக்கெட் இழப்பைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தாலும், கேப்டன் கோலியின் அசத்தல் ரன்-அவுட்டால் நிலைமை மாறியது. இங்கிலாந்து அணி இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்தில் 287 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் முரளி விஜய் சிறப்பாக ஆடி ஐம்பது ரன்களைக் கடந்தனர். ஆனால், சாம் குர்ரனின் அதிரடி பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரியத் தொடங்கின. அவர் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அதேபோல், பென் ஸ்டோக்ஸ் இரண்டு விக்கெட்டைக் கைப்பற்றினார். அதிகம் விமர்சிக்கப்பட்ட கேப்டன் கோலி நிதானமாக ஆடிக் கொண்டிருக்க, அவருக்கு துணையாக ஒரு வீரர்கூட களத்தில் ஒத்துழைக்காமல் பெவிலியன் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
39 ஓவர்கள் வீசப்பட்டுள்ள நிலையில், இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்துள்ளது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர்கள் இதுவரை விக்கெட் வீழ்த்தாததால் அவர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.