இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி, நான்காவது நாளான இன்றோடு முடிவுக்கு வந்தது. இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சிறப்பான பேட்டிங் மற்றும் பும்ரா, அஸ்வின், சிராஜ் ஆகியோரின் சிறப்பான பந்து வீச்சால் இப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
'பாக்சிங் டே' போட்டியாக நடைபெற்ற போட்டியில் அடைந்த தோல்வியின் விரக்தியில் இருக்கும் ஆஸ்திரேலியாவிற்கு மேலும் ஒரு அடியாக, அந்த அணிக்கு போட்டி கட்டணத்திலிருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டதோடு, ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளிலிருந்து 4 புள்ளிகளும் குறைக்கப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்து வீசி முடிக்காததே இதற்குக் காரணம். ஐசிசி விதிப்படி, குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் வீசப்படும் ஒவ்வொரு ஓவருக்கும், போட்டி கட்டணத்திலிருந்து 20 சதவீத அபராதம் விதிக்கப்படுவதோடு, டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிகளிலிருந்து 2 புள்ளிகள் குறைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.